டில்லி
முகக் கவசம் அணியாத பேச்சாளர்கள் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த கட்சிகளின் பேச்சாளர்கள் பலர் முகக் கவசம் அணியாமல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் டில்லியை சேர்ந்த விக்ரம் சிங் என்பவர் டில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட, ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்குத் தேர்தல் நடை பெற உள்ளது.. இதற்காக டில்லி உட்பட, பல பகுதிகளில் இருந்து கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பிரசாரத்துக்குச் செல்கின்றனர். தலைவர்களைப் பார்ப்பதற்காகவும், பேச்சைக் கேட்பதற்காகவும், மக்கள் அதிகளவில் கூடுகின்றனர். ஆகவே கொரோனா வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக ப்ல நட்சத்திரப்பேச்சாளர்களும் பல வேட்பாளர்களும் முகக் கவசம் அணிவதில்லை. இதனால் அவர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே இவ்வாறு முகக் கவசம் அணியாமல் பிரசாரம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்கள் தேர்தல் பிரசாரம் செய்யத் தடை விதிக்க வேண்டும்” எனக் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]