டெல்லி: தமிழ்நாடு ஆளுநரை பதவி நீக்கம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுமீதான விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில், ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு தீவிரமாகி உள்ளது. மேலும் பல்கலைக்கழக வேந்த பிரச்சினை உள்பட பல்வேறு நிகழ்வுகளில் ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே காரசாரமான மோதல்கள் தொடர்ந்து வருகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரை நிகழ்த்தாமல் புறக்கணித்து விட்டு வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் முடிவடைந்தும், அவர் தொடர்ந்து ஆளுநராக பணியாற்றி வருகிறார். அதனால், அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என குரல்கள் வலுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் இதுதொடர்பான ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில்; ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக உள்ளது. ஆளுநரின் செயல்பாடு அவர் தமிழ்நாடு ஆளுநராக செயல்பட விருப்பம் இல்லை என்பதையே காட்டுகிறது. விளம்பரம் தேடும் நோக்கத்திலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார். அரசியல் சாசனத்தை மீறி ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதால் அவரை பதவி நீக்கம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.