டெல்லி: தேச துரோக வழக்கிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் கால அவகாசத்தை இன்று நீட்டித்துள்ளது. மேலும் இந்த வழக்கு ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றலாமா என்பது குறித்து ஆராயப்படும்” என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
தேச துரோக சட்டப்பிரிவுக்கு எதிராக இந்தியா பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம், திரிணமூல் எம்பி மஹுவா மொய்த்ரா என ஐந்து பேர் சார்பாக தனித்தனியாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 2021 ஜனவரியில் விவசாயிகள் போராட்டம் வன்முறையாக மாறியபோது மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய், மிருணாள் பாண்டேவுக்கு எதிரான முதல் தகவல் அறிக்கை டிவிட்டரில் வெளியிடப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்திய பத்திரிக்கையாளர் சங்கம், தேச துரோக சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. “இந்த முதல் தகவல் அறிக்கை ஊடகவியலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். தேசத்துரோகச் சட்டங்களை அரசாங்கம் பல்வேறு காலகட்டங்களில் துஷ்பிரயோகம் செய்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் தனிநபர்கள் தங்கள் கடமைகளை உறுதிப்படுத்தும் வகையில் பதிவு செய்யும் தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டதற்காக அரசாங்கம் பழிவாங்குகிறது. எனவே, தங்களின் கருத்து சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்க மனுதாரர்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் மனுதாரர்கள் பதிலளிக்க சனிக்கிழமை காலைவரையிலும், மத்திய அரசு அதற்கான பதிலை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய திங்கள்கிழமை காலை வரையிலும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மே 10ஆம் தேதி, மதியம் 2 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.