சென்னை: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது, சீமான் மீது எஸ்சி, எஸ்டி சட்டத்தில் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, சீமான் வழக்கின் விசாரணை அதிகாரியாக பட்டபிராம் உதவி ஆணையர் சுரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை விமர்சித்து வந்த பாடலை பாடியதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து, அவதூறாகப் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார், அவரை நீதிமன்றம் உடனே ஜாமினில் விடுதலை செய்தது.
இது தொடர்பாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “கொலை செய்பவர்கள், சாராயம் காய்ச்சுபவர்கள் மீது பாயாத வழக்கு மேடையில் பேசியதற்காகப் பாய்கிறது. கருணாநிதி குறித்தப் பாடலை மேடையில் பாடியதற்காகக் கைது செய்திருக்கிறார்கள். அந்தப் பாடலைப் எழுதியவர், பாடியவரைக் கைது செய்தார்களா? இப்போது நான் அந்தப் பாடலைப் பாடுகிறேன். என்மேல் வழக்குப்பதிவு செய்யுங்கள்” என்று கூறிய சீமான் கருணாநிதி குறித்த அவதூறுப் பாடலை பத்திரிகையாளர்கள் முன்பு பாடிக் காட்டினார்.
இதன்பிறகு, அந்த பாடலில் இடம்பெற்ற வார்த்தையான சட்டாளன் என்பது பட்டியலினத்தை சார்ந்த ஒரு பிரிவின் பெயர் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்தே அந்த வார்த்தைக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து திமுக நபர் அஜேஷ் என்பவர் பட்டபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அவர் அளித்த புகாரின் பேரில் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கதாத நிலையில், மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்திடம் சீமான் குறித்து அவர் புகார் அளித்தார்.
இதை ஏற்ற மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம், சீமான் அவதூறாகப் பேசியது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையருக்கு மாநில எஸ்.சி., எஸ்.சி. ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.
மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தின் உத்தரவின் பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பட்டாபிராம் காவல் துறையினர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், சீமான் வழக்கின் விசாரணை அதிகாரியாக பட்டபிராம் உதவி ஆணையர் சுரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
விசாரணை அதிகாரி சுரேஷ் குமார் சீமான் வீட்டிற்கே சென்று விசாரணை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நல ஆணையத்துக்கு, கீழ்க்காணும் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக திமுக அரசு பதவி ஏற்ற பிறகு கடந்த 2021 ஆண்டு நியமிக்கப்பட்டனர். அதன்படி, தலைவராக ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சிவகுமார், துணைத் தலைவராக புனிதப் பாண்டியன் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து, உறுப்பினர்களாக வழக்கறிஞர் குமாரதேவன், எழில் இளங்கோவன், லீலாவதி தனராஜ், வழக்கறிஞர் பொ. இளஞ்செழியன், முனைவர் கே.ரகுபதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் கைது? சீமான் மீது எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!