சென்னை: அர்ச்சகர்கள், பூசாரிகள் தொடர்பான தமிழ்நாடு அறநிலையத்துறை அறிவித்துள்ள புதிய விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கோயில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை பணி புதிய விதிகள் 2020ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டன. அதன்படி, 18 வயதிலிருந்து 35 வயது உடையவர்களை மட்டும் அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும், ஓராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளன. இதற்கு அர்ச்சகர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
அரசின் புதிய விதிகளை எதிர்த்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின், பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் என்னும் இடத்தில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் பரம்பரை பூசாரிகள் எட்டுப் பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து, மனு குறித்து, 4 வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்குகளையும் இந்த வழக்கோடு சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டு விசாரணையை 5 வாரங்களுக்குத் தள்ளிவைத்தது.