சென்னை:
உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதற்கு எதிரான வழக்கில் ஈரோடு மதிமுக எம்பி கணேச மூர்த்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.
ஈரோடு, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் விளைநிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்கப் பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். உயர்மின்கோபுரம் அமைப்பதால் அருகில் வசிப்பவர்களுக்கு மின்காந்த அலைகளால் நேரடியாக பாதிப்பு ஏற்பட்டு வருவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரோடு எம்பிஅ.கணேசமூர்த்தி நேற்று முன்தினம்உயர் மின்கோபுரம் அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டார். அப்போது, ஈரோட்டை அடுத்த விஜயமங்கலம் மூனாம்பள்ளி என்றபகுதியில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் 400 கிலோ வாட் உயர் மின்கோபுரத்தின் அடியில் சோதனை மேற்கொண்டார். விவசாயிகள் கொண்டு வந்த டியூப் லைட்டை மின் கம்பிகளுக்குகீழே இருந்தபடி எம்பி கணேசமூர்த்தி பிடித்தபோது, அந்த டியூப்லைட் எரிந்தது. மேலும் டெஸ்டரை கொண்டு சோதித்தபோது, அவரது உடலில் மின் அலைகளின் பாதிப்பு காரணமாக டெஸ்டரில் விளக்கு எரிந்தது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மின் கோபுரங்கள் எதிர்த்த வழக்கு நீதிபதி ராஜா முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி பிரம்மான பத்திரம் தாக்கல் செய்தார். பிரமாணப் பத்திரத்தை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.
அதைத்தொடர்ந்து,. விவசாய நிலத்தில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கும் பணிகளில் தற்போது உள்ள நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதுதொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.