சென்னை: அரியர் தேர்வு ரத்து எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.
தமிழகஅரசு, பொறியியல் மாணவர்கள் மற்றும் கலை கல்லூரி மாணவர்களின் இறுதி செமஸ்டர் தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்றும், அரியர் தேர்வுக்கு பணம் கட்டியவர்களின் தேர்வும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என அறிவித்தது.
ஆனால், பொறியியல் மாணவர்களின் அரியர் தேர்வு ரத்து என்ற முடிவை ஏற்க முடியாது என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கூறி வந்தார். இது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் எழுதியது என்று தெரிவித்தார்.
ஆனால், இதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஏஐசிடிஇ அதுபோன்ற எந்த கடிதத்தை யும் அனுப்பவில்லை என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறி வந்தார். இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா இன்று ஏஐசிடியின் கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த பரபரப்பான நிலையில், அரியர் தேர்வு ரத்துக்கு எதிராக, திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதுபோல, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி அரியர் தேர்ச்சிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.