சென்னை: டிபிஐ வளாகத்தின் பெயரை முன்னாள் அமைச்சரான மறைந்த அன்பழகன் வளாகம் என பெயர் மாற்றிய திமுக அரசு, அந்த வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் சிலை வைக்கப்படும் என அறிவித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு திடீரென வாபஸ் பெறப்பட்டு உள்ளது.
மறைந்த முன்னாள் கல்வி அமைச்சர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை ஒட்டி, சென்னையில் பள்ளிக் கல்வி இயக்குனரகம் அமைந்துள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் (டிபிஐ) அவரது சிலை அமைக்கப்படும் என நவம்பர் 30ஆம், அந்த வளாகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தொடர்ந்து சிலை தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
தமிழகஅரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை உடையாம்பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிலைகள் அமைக்கக் கூடாது என உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, மறைந்த தலைவர்களுக்கு சிலைகள் வைத்தால், ஆட்சிக்கு வரும் கட்சிகளும் தங்கள் தலைவர்கள் சிலைகளை அமைக்கும் வகையில் தவறான முன்னுதாரணமாகி விடும். தலைவர்களை கவுரவிக்க அவர்கள் பெயரில் நலத் திட்டங்களை தொடங்கினால், பொதுமக்களுக்கும் பயனளிக்கும். அதைவிடுத்து சிலைகளை அமைப்பதால், அரசுக்கு செலவு ஏற்படுவதுடன், எதிர்கட்சியினர் மத்தியில் விரோதத்தையும் ஏற்படுத்தும். ஏற்கனவே சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் அன்பழகனுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளதால், டிபிஐ வளாகத்தில் அவரது சிலையை அமைக்க தடை விதிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த மனு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் திடீரென மனுவை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஏற்கனவே திருவண்ணாமலை கிரிவலை பாதையில் கருணாநிதி சிலை வைக்க எதிர்த்து தொடரப்படட வழக்கும் திடீரென வாபஸ் பெறப்பட்டது. அரசின் நடவடிக்கைக்கு எதிரான வழக்குகள் திடீர் திடீரென வாபஸ் பெறப்படுவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. அரசுக்கு எதிராக வழக்கு தொடுப்பவர்கள் மிரட்டப்படுகிறார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வழக்கு வாபஸ்: திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை வைக்க எதிர்த்த தடை நீங்கியது…