சென்னை: முந்தையை அதிமுக அரசு வழங்கிய, 10.5% வன்னியர் உள் ஒதுக்கீடு எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம்  தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

வன்னிய சமுதாயத்தினர் நடத்தி வந்த பல்வேறு போராட்டத்தைத்தொடர்ந்து, பாமகவுடன் கூட்டணி ஏற்படுத்தும் வகையிலும், எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு, அரசு வேலைவாய்ப்பில்  வன்னிய சமுதாயத்தினருக்கு 10.5% வன்னியர் உள் ஒதுக்கீடு வழங்கி சட்டதிருத்தம் கொண்டு வந்தது. இதற்கு மற்ற சமுதாயத்தினர் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தமிழக அரசின் வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு எதிராக சென்னையை சேர்ந்த சந்தீப் குமார், சிவகங்கையை சேர்ந்த முத்துகுமார் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுக்கள் மீதான விசாரணை  நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது,

அப்போது, மனு தொடர்பாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுகலாமே? என்றதுடன், வழக்கை சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு பரிந்துரைக்கலாம் என்றிருக்கிறோம் எனக் கூறினர்..

இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகமுத்து, எதிர்ப்பு தெரிவித்தார்.  இதே கோரிக்கையுடனான மனு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கை மாற்றக்கூடாது என கூறினார். இந்த உள்ஒதுக்கீடு காரணமாக மற்ற சமுதாயத்தினர் பாதிக்கப்படுவார்கள், வன்னியர்   சமுதயத்தினருக்கு மட்டுமே வேலை & கல்வியில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் ,அதனால், இதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து, தமிழக அரசின் கருத்தையும் அறிந்த பின்னரே முழுமையாக விசாரித்து  முடிவு செய்ய முடியும், எனவே தற்போதைய நிலையில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தோடு,  தமிழ்நாடு அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை ஒத்தி வைத்தனர்.