தேனி: சபரிமலைக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் வந்த வாகனம், தேனி குமுளி மலைச்சாலையில் விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரம் கிராமத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 10 பேர் கார் ஒன்றில் சபரிமலைக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு நேற்று இரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கார் குமுளி மலைச்சாலையில் உள்ள இரைச்சல் பாலம் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சாலையோரத்தில் உள்ள சுமார் 50அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக- கேரள மாநில போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சுமார் 50அடி பள்ளத்தில் உள்ள பென்ஸ்டாக் குழாய்களுக்கு இடையே ( முல்லைப் பெரியாறு நீர் செல்லும் ராட்சத குழாய்கள்) சிக்கியிருந்த காருக்குள் இருந்த ஐய்யப்ப பக்தர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் துரதிருஷ்டவசமாக விபத்தில் நிகழ்விடத்திலேயே 7பேர் பரிதாபமாக பலியாகினர். 9வயது சிறுவன் உள்பட 3பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 8ஆக உயர்ந்தது. மற்ற இருவரும் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்துக்குள்ளான கார் கிரேன் மூலம் மீட்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்த ஐய்யப்ப பக்தர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அனைவரது சடலங்கள் உடற்கூறாய்வுக் காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.