சென்னை:

சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  ஜெனரேட்டர் மீது கார் மோதியதில், அதில் பயணம் செய்த புதுமணத் தம்பதியினர் பலியாகினர். இந்த சோக சம்பவம் மாமல்லபுரம் அருகே நடைபெற்றுள்ளது.

சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர், மோடி, ஜின்பிங் வரவேற்பு பலகை வைப்பதற்காக நிறுத்தப் பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் தமிழ்மாறன் சுவேதா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆகிறது. தமிழ்மாறன் கார் டிரைவராக உள்ளார். இவர் மனைவி மற்றும் உறவினர்கள் 7 பேருடன் ஒரே காரில் சென்னை மாமல்லபுரம் அருகே  நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்திற்கு ஈசிஆர் சாலை வழியாக சென்றுகொண்டிருந்தனர்.

கார் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து  சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் மீது மோதியது. இந்த கோர விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடடினயாக விரைந்து வந்து, அவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் 7 பேரையும் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், தமிழ்மாறன் மற்றும் சுவேதா ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஜெனரேட்டர், மோடி, சீன அதிபர் வருகையையொட்டி அமைக்கப்பட உள்ள வரவேற்பு பேனருக்கு மின்சாரம் தருவதற்காக நிறுத்தப்பட்டு இருந்தாக கூறப்படுகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.