லாஸ் வேகாஸ் – நியூ ஆர்லியன்ஸ் சம்பவங்களுக்கு தொடர்பு இருப்பதாக எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் டிரம்புக்கு சொந்தமான ஹோட்டல் முன்பு கார் குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

முன்னதாக நியூ ஆர்லியன்ஸில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது டிரக் எறியதில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

புத்தாண்டு தினத்தன்று அமெரிக்காவின் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விரு சம்பவங்களும் தீவிரவாத தாக்குதலாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

லாஸ் வேகாஸ் ஹோட்டல் முன்பு நிறுத்தப்பட்ட கார் டெஸ்லா நிறுவனத்தின் சைபர் டிரக் வகையைச் சேர்ந்தது என்றும் நியூ ஆர்லியன்ஸில் பயன்படுத்தப்பட்ட டிரக் F-150 வகையைச் சேர்ந்தது என்றும் தெரியவந்துள்ளது.

தவிர, இவ்விரு வாகனங்களும் ‘டுரோ’ எனும் வாடகை வாகன செயலி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லாஸ் வேகாஸ் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட டெஸ்லா நிறுவனத்தின் சைபர் டிரக் சம்பவத்திற்கு ஒரு மணி நேரம் முன்பு டெஸ்லா சார்ஜிங் ஸ்டேஷனில் சார்ஜ் செய்தது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதனை உறுதிப்படுத்திய டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி எலன் மஸ்க் இதுகுறித்த விவரங்களை காவல்துறைக்கு வழங்கியுள்ளார்.

இந்த சம்பவத்தில் 15 முதல் 20 வினாடிகள் மட்டுமே அந்த கார் ஹோட்டல் வாசலில் நின்றதாகவும் அதை ஓட்டிவந்த நபர் இந்த விபத்தில் தீக்காயமடைந்து இறந்ததாகவும் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும், அந்த நபரின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை, அதேவேளையில் டுரோ செயலி மூலம் இந்த காரை பதிவு செய்த நபரின் விவரம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தில் ஈடுபட்டது அதே நபர் தானா என்பதை புலனாய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, லாஸ் வேகாஸ் – நியூ ஆர்லியன்ஸ் இவ்விரு இடங்களிலும் ஈடுபடுத்தப்பட்ட வாகனங்கள் ‘டுரோ’ செயலி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டதை அடுத்து இவ்விரு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்று எலன் மஸ்க் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதனால், இந்த இரண்டு சம்பவங்களும் தீவிரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது டிரக் மோதியதில் 10 பேர் பலி 30 பேர் காயம்