புதுடெல்லி:
பீகார் மாநிலம் முஜாபர்பூர் காப்பக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புனர்வு வழக்கில்,விசாரணை அதிகாரியை மாற்றியதற்கு, உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் தற்காலிக சிபிஐ இயக்குனர் நாகேஸ்வரராவ் மன்னிப்பு கேட்டார்.
முஜாபர்பூர் காப்பக பெண்கள் பாலியல் வன்புனர்வு செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடந்து கொண்டிருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சிபிஐ இணை இயக்குனர் ஏகே.சர்மா நியமிக்கப்பட்டிருந்தார்.
தற்காலிக சிபிஐ இயக்குனராக சில நாட்கள் இருந்த நாகேஸ்வரராவ், ஏகே.சர்மாவை அங்கிருந்து மாற்றினார். பின்னர் ரயில்வே கூடுதல் இயக்குனராக சர்மா நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், நாகேஸ்வரராவ் மற்றும் சிபிஐ கூடுதல் சட்ட ஆலோசர் பாசுரன் ஆகியோர் முஜாபர்பூர் வழக்கிலிருந்து சர்மாவை விடுவித்தனர்.
கடந்த பிப்ரவரி 7-ம் தேதி இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி விசாரித்தது.
முஜாபர்பூர் வன்புனர்வு வழக்கில் உச்சநீதிமன்றம் 2 உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் எப்படி அந்த வழக்கின் விசாரணை அதிகாரி ஏகே.சர்மாவை அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கலாம் என்று என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கேள்வி எழுப்பினார்.
இருவரும் நீதிமன்றத்தை அவமதித்துள்ளனர். இது பற்றி கேபினட்டின் நியமன குழுவுக்கும் நாகேஸ்வரராவ் தெரியப்படுத்தவில்லை என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.
நாகேஸ்வரராவ் மற்றும் பாசுரன் ஆகியோரை செவ்வாய்க் கிழமை நேரில் ஆஜராக உத்தரவிட்ட தலைமை நீதிபதி, ஏ.கே.சர்மாவை பணியிலிருந்து விடுவிக்க காரணமானவர்கள் பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு தற்போதைய சிபிஐ இயக்குனருக்கு உத்தரவிட்டார்.
எங்கள் உத்தரவோடு விளையாடுகிறீர்கள், உங்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்றும் தலைமை நீதிபதி ரஞ்சான் கோகாய் என எச்சரித்தார்.
இந்நிலையில், மன்னிப்பு கோரி உச்சநீதிமன்றத்தில் முன்னாள் தற்காலிக சிபிஐ இயக்குனர் நாகேஸ்வரராவ், மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஏகே.சர்மாவை பணியிலிருந்து விடுவித்தது தவறு என்பதை ஏற்கிறேன். இதற்காக நான் நிபந்தனையற்ற மன்னிப்பும், தெளிவான மன்னிப்பும் நீதிமன்றத்திடம் கேட்டுக் கொள்கின்றேன்.
என்றுமே நீதிமன்றத்தை நான் குறைத்து மதிப்பிட்டதில்லை. நீதிமன்றம் மீது எனக்கு மரியாதை உண்டு. நீதிமன்றத்தை மதிக்கக் கூடாது என்ற எண்ணமும் என்னிடம் இருந்ததில்லை. நீதிமன்ற உத்தரவை மீறுவதை கனவில் கூட நான் நினைத்துப் பார்த்ததில்லை.
எனது மன்னிப்பை நீதிமன்றம் ஏற்கவேண்டும்.
இவ்வாறு நாகேஸ்வரராவ் மனுவில் குறிப்பிட்டிருந்தார். சிபிஐ கூடுதல் சட்ட ஆலோசகர் பாசுரனும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வருகிறது.