டெல்லி: அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது என மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்எழுத்துமூலம் பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கியது. இன்றைய தொடரில், வெளிநாட்டில் இந்திய அரசு குறித்து, அவமரியாதை செய்த ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் ராஜ்நாத்சிங் தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு அவையை முடக்கின.

முன்னதாக இன்று காலை மக்களவையில் உறுப்பினர் தீபக் பாய்ஜ், அதானி நிறுவனம் வாங்கிய கடன்கள் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  ஆர்பிஐ சட்டத்தின்படி எந்தவொரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் வழங்க முடியாது. எனவே, அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து அவரது வணிகமும் முடங்கியது. உலகின் 3வது பணக்காரராக இருந்த அதானி தற்போது 35வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார்.  அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் கோடிக்கும் மேலாக சரிந்தது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி, பாரத ஸ்டேட் வங்கி ஆகியவையும் பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து அதானி குழுமம் அதிக அளவில் முதலீடுகளை பெற்றிருந்தது.  அதானி குழுமத்துக்கு மொத்தமாக ரூ.2.26 லட்சம் கோடி கடன் இருக்கிறது. மொத்த சாம்ராஜ்ஜியத்தையும் கடன் வாங்கி கட்டி எழுப்பி இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், அவரது நிறுவனங்கள்,  எப்போது வேண்டுமானாலும் திவால் ஆகலாம் என அஞ்சப்படுகிறது.