சென்னை: சட்டவிரோதமாக குடியேறிய இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட தமிழர்கள், சிங்கர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து, ஏராளமான தமிழர்கள் அங்கிருந்து அடைக்கம் தேடி தமிழகம் வந்து தஞ்சமடைந்தனர். அவர்களில் ஏராளமானோர் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், திருச்சி கொட்டப்பட்டு முகாமில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் முந்தைய விசாரணையின்போது, அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக முடிவெடுக்குமாறு தனி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்தியஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இவர்கள், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதால் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது என வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்டு நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவு குறித்து பரிசீலித்து முடிவெடுக்காமல் எதற்காக மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, அகதிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இலங்கை அகதிகள் விஷயத்தில், தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு மாறி இருப்பதாகவும், இதுகுறித்து தமிழ்நாடு அரசு முடிவெடுக்க உத்தரவிடாலாம் என்றும் வலியுறுத்தினார்.
இதையடுத்து சட்டங்களுக்கு உட்பட்டே தமிழ்நாடு அரசு முடிவெடுக்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.