சென்னை: நீட் தேர்வை தமிழகஅரசு ரத்து செய்ய முடியாது என காங்கிரஸ் எம்.பி. எம்.பி.கார்த்திக் சிதம்பரம், திமுக அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்து உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி வழங்கி, ஆட்சியை கைப்பற்றிய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை என்று கைவிரித்து விட்டது. இருந்தாலும், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து நீட் பாதிப்பு குறித்த ஆய்வறிக்கையை பெற்று ஆய்வு நடத்தி வருகிறது. இதுமட்டுமின்றி, நடப்பு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே நீட் ரத்து செய்வதற்கான சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் நேற்று (18ந்தேதி) சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இந்த நிலையில், சட்ட ரீதியாக நீட் தேர்வை தடை செய்ய இயலாது. ஆனால், இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறத்தான் செய்யும். அதற்கு மாணவர்கள், தயாராக வேண்டும் என்று சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியளார்களை சந்தித்த கார்த்திக் சிதம்பரம் எம்.பி. கூறுகையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதில், தமிழக அரசாங்கத்தின் எண்ணம், தமிழ்நாட்டு மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கிறது. ஆனால், சட்ட ரீதியாக நீட் தேர்வை தடை செய்ய இயலாது. ஆனால், இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறத்தான் செய்யும். அதற்கு மாணவர்கள், தயாராக வேண்டும். வருகிற காலங்களில், நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு முயற்சி செய்யும் என்று கூறினார்.
தமிழகத்தில் நீட் தேர்வு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர், முன்னாள் காங்கிரஸ் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும், தற்போதைய காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிம்பரத்தின் தாயார் வழக்கறிஞர் நளினி சிதம்பரம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தப்போது கார்த்தி சிதம்பரமும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று கூறியிருப்பது திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.