டில்லி: 

ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞம், பாரதியஜனதா கட்சியை சேர்ந்தவருமான  அஷ்வினி குமார் உபாத்யாய் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில்,  ஒரு வேட்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கவும், அது தொடர்பான தேர்தல் சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி இருந்தார்.

இந்த வழக்கில் ஏற்கனவே நடைபெற்ற விசாணையின்போது,  தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஒரு வேட்பாளர், இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறும்போது, ஒரு தொகுதியில், மறுதேர்தல் நடத்த வேண்டியுள்ளது; இதனால், ஆணையத்துக்கு வீண் செலவு ஏற்படுகிறது; எனவே, ஒரு வேட்பாளர், ஒரே நேரத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும் என்றும், அப்படி ஒரு தொகுதியில் ராஜினாமா செய்தால் தேர்தல் செலவை வேட்பாளரே ஏற்க செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

ஏற்கனவே 2004ம் ஆண்டிலேயே தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தும் முக்கிய தலைவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறும் நோக்கில், இந்த பரிந்துரை அமல்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.