சென்னை:

குடிசை மாற்று வாரிய வீடுகளை வாடகைக்கு விட்டால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை ஒட்டேரி பகுதியில் நீர்வழிப் பாதையினை ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பவர்களை காலி செய்ய சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அதற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

அந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல், ‘‘குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பாக 177 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், ஆனால் 75 பேர் மட்டுமே அங்கு குடியேறியுள்ளனர்’’ என்றார்.

அதனைத் தொடர்ந்து நீதிபதி வைத்தியநாதன் கூறுகையில், ‘‘குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள் அந்த வீடுகளை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டால் அந்த பயனாளிகளின் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும். அத்துடன் ரத்து செய்யப்பட்ட ஒதுக்கீடானது வேறு ஒரு பயனாளிக்கு வழங்கப்பட வேண்டும்’’ என்றார்.