ஐதராபாத்,

ந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதையடுத்து, இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி ஒருநாள் போட்டித் தொடரை தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

ஏற்கனவே நடைபெற்ற தொடரில் இரு அணியினரும் ஆளுக்கொரு வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில்,  3-வது ஆட்டத்தில் வென்று தொடரைக் கைப்பற்றுவதில் இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்தன. நேற்று இந்த போட்டிக்கான ஆட்டம் ஐதராபாத்தில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், அங்கு பெய்த தொடர் மழையின் காரணமாக மைதானத்தில் நீர் தேங்கியது. அதன் காரணமாக மைதானத்தில் இருந்து நீர் வெளியேற்றியும், மைதானம் விளையாட தகுதியில்லாத நிலையில்  ஈரப்பதமாக இருந்தது. இதனால் மைதானம்  உலர வைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

இதையடுத்து, போட்டி ஒருங்கிணைப்பாளர்கள்  இரு அணிகளின் கேப்டன்களிடமும் ஆலோசனை நடத்தினர். அதையடுத்து, போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, டி20 தொடர் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதனால் போட்டியை காண வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.