சென்னை:

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்வதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எழுத்துத்தேர்வு நடத்தியது. அதைத்தொடர்ந்து கடந்த நவம்பர் 7ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியானது.  இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்பட்டது. அதையடுத்து இதுகுறித்து விசாணை நடைபெற்ற நிலையில், 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத் தேர்வை ரத்து செய்வதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அரசு தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் நேரடி நியமன எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 16-ல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. மறு தேர்வுக்கான அறிவிக்கை வரும் மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேர்வு நடத்தப்படும் என்றும்,   தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வுக்கான தேதி ஆகியன ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விரைவில் அறிவிக்கப்படும்.

கடந்த முறை விண்ணப்பித்தவர்கள் மீண்டும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்..  ஆனால், கடந்த முறை விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவர்கள் இந்த முறை செலுத்தத் தேவையில்லை. புதிய விண்ணப்பதாரர்களும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.