சென்னை: கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு நிலுவையில் உள்ள மனுக்களோடு விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

கச்சத்தீவு பிரச்சினை கடந்த 50ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. 1970-களில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும், இலங்கை பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயகவிற்கும்  இடையே இருந்த நட்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காக கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கும் முடிவை இந்திரா காந்தி எடுத்தார்.

இதன் அடிப்டையில், 1974 ஜூன் 28-ம் தேதி இந்தியாவும் இலங்கைக்கு இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி,   கச்சத்தீவு பகுதி இலங்கை எல்லைக்கு செல்லும்படி எல்லைக்கோடு வரையறுக்கப்பட்டது, அதேநேரத்தில் இந்தியர்களின் மீன் பிடிக்கும் உரிமையும், திருவிழாவிற்கு செல்லும் உரிமையும் பாதுக்காக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டபோது, தமிழ்நாட்டில் மறைந்த முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆனால், கச்சத்தீவு இலங்கையின் கைகளுக்கு சென்றபோது, தமிழக மீனவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், தற்போது மேலும் மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில்,   கச்சத்தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமாக இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சமஸ்தான முறை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சமஸ்தானத்துக்கு சொந்தமான நிலப்பகுதியை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. மீன் வலைகளை உலர்த்தவும், சமையல் செய்யவும் கச்சத்தீவை தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர்.

இதுபோன்ற சூழலில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடந்த 1974-ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் அடிப்படையில், கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் சட்டவிரோதமானது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட இரு நாட்டு பிரதமர்களுக்கும் அதிகாரம் இல்லை. நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் பெறாததால் இது செல்லுபடியாகாது.

எனவே கச்சத்தீவை மீண்டும் நமது மத்திய அரசிடமே ஒப்படைக்க வேண்டும். கச்சத்தீவை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்திய மீனவர்கள் மீன்பிடித்த காலம் தற்போது மாறிவிட்டது. கச்சத்தீவை இலங்கை கப்பற்படை முழு கட்டுப்பாட்டில் வைத்து, இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.  கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 1,500 மீனவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதுபோன்ற சூழலில் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினரிடம் இருந்து பாதுகாக்க கோரி தமிழக சட்டமன்றத்தில் கடந்த 2013, மே 3-ந் தேதி தீர்மானம் இயற்றப்பட்டது.

இந்த தீர்மானம் தொடர்பாக மத்தியஅரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, 1974-ம் ஆண்டு கையெழுத்தான கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை, நீதிபதி ஹெமந்த் குப்தா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயசுகின் ஆஜராகி, ‘ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படுகின்றனர்’ என சுட்டிக்காட்டினார். அப்போது நீதிபதிகள், ‘இதே விவகாரம் தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளதே, அதை விசாரித்து தீர்ப்பு அளித்தால் போதாதா?’ என வினவினர்.

இதற்கு வக்கீல் ஜெயசுகின், ‘இந்த மனுவையும் ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் இணைத்து விசாரிக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, இந்த மனுவை ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் இணைக்க உத்தரவிட்டது.