சென்னை,

டந்த 1ந்தேதி மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்த பொதுபட்ஜெட்டில், மீன்பிடி சாதனங்கள், மீன் உணவுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்நிலையில், மீன்பிடி சாதனங்கள், மீன் உணவுகள் மீதான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என்றும்,  மீனவர்கள் எதிர்பார்த்த பல்வேறு கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது என்றும்  தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) கூறியுள்ளது

இதுகுறித்து மாநில தலைவர் ஜி.செலஸ்டின், மாநில பொதுச் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அதிக அளவில் உள்ள மீனவ குடும்பங்கள் மீன்பிடித் தொழில் மூலம் இந்தியாவிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டுவதில் பெரும் பங்காற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இந்திய மீனவர்கள் மீன்பிடித்தொழிலுக்காக கடல் கடந்து வெளிநாடுகளுக்கு குறிப்பாக அரபு மற்றும் பிற நாடுகளுக்கும் செல்லும் போது பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். முக்கியமாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் பிரச்சனை நீடித்துக்கொண்டே இருக்கிறது.

எனவே மீனவர்களின் பிரச்சனையில் தனிக்கவனம் செலுத்தி, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசில் மீனவர்களுக்கென தனி அமைச்சகம் அமைக்க வேண்டுமென மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கையாக வைத்து வருகின்றனர். பாஜக கடந்த தேர்தல் வாக்குறுதியில் தனி அமைச்சகம் அமைத்து தருவதாக கூறியது, ஆனால் தற்போதைய நிதி நிலை அறிக்கையில் மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் அமைத்து தருவது குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

மண்டல் குழு பரிந்துரைப் படி தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களை கடல்சார் பழங்குடியினராக அறிவித்து கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் துறைகளில் உரிய பிரதிநிதித்துவம் வழங்குவதாக பாஜக உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி வழங்கின. ஆனால் மத்திய பாஜக அரசு இதுவரை இதுகுறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது மீனவர்களை ஏமாற்றும் செயல் ஆகும்.

அண்மையில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள், மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலன்களைப் பாதுகாக்க கேரள அரசின் நிதி நிலை அறிக்கையில் ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதில் இலவச வைஃபை வசதி, மீனவர்களின் படகுகளை ரிமோட் செயற்கைக் கோள் தொழில்நுட்பம் மூலம் இணைப்பது, நிவாரண உதவிகளை அதிகரிப்பது ஆகியவை இடம் பெற்றுள்ளன. இது தவிர, கடலோரப் பகுதியை பசுமையாக்கும் திட்டத்துக்கு ரூ.150 கோடி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவுகளை கடுமையாக பாதித்த ஒக்கி புயலின் பாதிப்புகளிலிருந்து நிரந்தரமாக மீள வேண்டும் என்று மத்திய அரசிடம் சம்பந்தப்பட்ட மாநிலங்கள், குறிப்பாக தமிழக அரசு புயல் பாதிப்பு நிவாரணமாக ரூ.4047 கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து, ஆனால் மத்திய அரசு இதற்கான அறிவிப்பை வெளியிடவில்லை.மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு பல்வேறு சிறு தொழில் களை கடுமையாக பாதிப்பதோடு, மீன்பிடித் தொழிலையும் பாதித்துள்ளது. குறிப்பாக நாடு முழுவதற்கும் மீன்பிடிக்க தேவையான மீன்பிடி வலை மற்றும் மீன்பிடி கயிற்றில் 60 சதவீதம் தமிழகத்தில் இருந்து தான் விற்பனை செய்யப்படுகிறது.

அத்தகைய மீன்பிடி வலைக்கு 12 சதவீதம், விசைப்படகுகளுக்கு 28 சதவீதம் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்களுக்கு 18 சதவீதம் என்ற ஜி.எஸ்.டி. வரி விதிப்பு உள்ளது. இது , மீனவர்களுக்கும் கடும் சுமையை ஏற்படுத்தியுள்ளது .அதே போல உயர்தர மீன்களுக்கும், கருவாட்டிற்கும் 5 சதவீதம் வரி விதித்திருப்பதால், மீன் விற்பனையும் பெருமளவு குறையும். இதனால் மீனவர்களுக்குத் தான் நஷ்டம் ஏற்படும். மீன் பிடித்தொழிலையே நம்பி இருக்கின்ற மீனவக் குடும்பங்கள் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பினால் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர்.

எனவே மத்திய அரசு மீன்பிடி தொழிலுக்கான உபகரணங்கள் மற்றும் மீன் உணவு வகைகள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். என்ற மீனவர்களின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.எனவே மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டு தொடர் முடிவதற்குள் மீனவர்களின் மேற்கண்ட கோரிக் கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.