காஞ்சிபுரம்: 24 மணி நேரத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியுமா? என குன்னம் கிராம சபை கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ரஜினியை கடுமையாக சாடினார்.
அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் தி.மு.க சார்பில் 16,000 கிராம சபைகள் கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று மாநிலம் முழுவதும் கிராமசபை கூட்டங்கள் தொடங்கி உள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக சார்பில், இன்றுமுதல் வாக்காளர்களை சந்திக்கும் வகையில் கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் – குன்னம் ஊராட்சியில் குன்னம் பகுதியில் நடைபெறும்கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கிராம சபை கூட்டம் நடத்தி மக்கள் பிரச்னைகளை கேட்டு வருகிறார்.‘
அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசிய மு.க. ஸ்டாலின், கட்சி தொடங்கி 24 மணி நேரத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று சொல்கிறார்கள். தமிழக முதல்வரும், நானும் ரவுடி.. ரவுடி.. என்று சொல்வதுபோல் நான் விவசாயி… விவசாயி என்று கூறிவருகிறார். விவசாயி எனக்கூறி வரும் முதல்வர் பழனிசாமி விவசாயிகளுக்காக எதையும் செய்யவில்லை. பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு முதல்வர் பச்சைத் துரோகம் செய்து வருகிறார் என்று கடுமையாக விமர்சித்ததுடன், பிரதமர் மோடி இதுவரை போராடும் விவசாயிகளை நேரில் சந்திக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசியவர், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இன்னும் மர்மமாக கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த மர்மம் திமுக ஆட்சிக்கு வந்ததும் கலையப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழகம் முழுவதும் திமுக முன்னணியில் இன்று கிராமசபை கூட்டம் நடத்தி வருகின்றனர்.