கொல்கத்தா: ‘என்னை அவமானப்படுத்துகின்றனர்’, நான் அவரது காலில் விழ வேண்டுமா, இதுபோன்ற அவமானங்களை தாங்க முடியாது என மோடி தலைமையிலான மத்தியஅரசு மீது மம்தா பானர்ஜி கொந்தளித்துள்ளார்.
மேற்குவங்க முதல்வருக்கும், மத்தியஅரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஒரு நாட்டின் பிரதமரை, முதல்வரான மம்தா மதிப்பதில்லை என்று குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுகின்றன. இந்த நிலையில், யாஸ் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மோடி மேற்குவங்கம் சென்றிருந்தார். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாக்கப்பட்டு உள்ளது.
வங்க கடலில் உருவான யாஸ் புயல், அதி தீவிர புயலாக மாறி ஒடிசாவில் கடந்த மே 26 அன்று கரையை கடந்தது. இந்த புயல் காரலணமாக, ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டன. புயல் சேதங்களை பார்வையிட்ட பிரதமர் மோடி, இரு மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி நிவாரண பணிகளுக்காக ஒடிஷாவுக்கு ரூ.500 கோடியும், மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்டுக்கு ரூ.500 கோடியும் அறிவித்தார்.
புயல் சேதம் குறித்து பார்வையிட மேற்குவங்கம் சென்ற பிரதமரை வரவேற்கவோ, சந்திக்கவோ சம்பிரதாயப்படி முதல்வர் செல்வது வழக்கம் . ஆனால், முதல்வர் மம்தா செல்ல வில்லை என்று கூறப்படுகிறது.
அதற்கு பதிலாக விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆய்வு கூட்டத்தில் பிரதமரை சந்தித்ததாகவும், அப்போது, பிரதமரின், “நீங்கள் என்னை சந்திக்க விரும்பினீர்கள், அதனால் தான் நான் இங்கு வந்தேன். நானும் எனது தலைமை செயலாளரும் இந்த அறிக்கையை உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகிறோம். இப்போது திகாவில் எங்களுக்கு ஒரு கூட்டம் இருக்கிறது. எனவே நாங்கள் வெளியேற உங்கள் அனுமதியை எதிர்பார்க்கிறோம்” என கூறிவிட்டு சென்றுவிட்டார்.
முன்னதாக ஆய்வு கூட்டத்துக்கு சென்ற பிரதமரை, மம்தா சந்திக்க வராமல் சுமார் அரை மணி நேரம் காக்க வைத்ததாகவும், இதையடுத்து பிரதமரை கவர்னர் மற்றும் பாஜக தலைவர்கள் சந்தித்து பேசியதமாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ள மத்தியஅரசு, பிரதமர் மற்றும் கவர்னரை, மம்தா அரை மணி நேரம் காத்திருக்க வைத்ததாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. ஆய்வுகூட்டத்தில், பிரதமரின் இடப்பக்கம் கவர்னர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி ஆகியோர் உள்ளனர். அவரது வலப்பக்க இருக்கைகள் காலியாக உள்ளன.
இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு விளக்கம் அளித்துள்ள மம்தா பானர்ஜி, பிரதமர் மற்றும் மாநில முதல்வருக்கு இடையேயான புயல் பாதிப்பு ஆய்வுக்கூட்டத்தில் பாஜக தலைவர்கள், ஆளுநருக்கு என்ன வேலை? என கேள்வி எழுப்பி இருப்பதுடன், தான், பிரதமரிடம் கேட்டுவிட்டே கூட்டத்தில் இருந்து கிளம்பினேன்; நான் கிளம்பிய பின்பு காலி சேர்களை புகைப்படம் எடுத்துவிட்டு, அதனை பரப்பி என்னை அவமானப்படுத்துகின்றனர், நான் என்ன அவரது காலில் விழ வேண்டுமா? இதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது என கொந்தளித்துள்ளார்.