டில்லி:

பிரபல தொழில் அதிபர் விஜய்மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி அளிவலான பணம் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்து, தற்போது லண்டனில் தலைமறைவாக உள்ளார்.

இதுகுறித்து தொடரப்பட்ட புகாரின் பேரில்,  உலக அளவில் தனக்குள்ள எல்லா சொத்துகளையும் முடக்குமாறு இந்திய கடன் மீட்பு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்தும், இந்திய கடன் மீட்பு தீர்ப்பாயத்தின் அறிவிப்புக்கு தடை விதிக்குமாறு விஜய் மல்லையா, இங்கிலாந்து நீதி மன்றத்தில் கோரிக்கை வைத்தார். ஆனால், அவரின் கோரிக்கையை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

மேலும்,  இந்திய நீதிமன்ற உத்தரவுப்படி விஜய் மல்லையாவிடம்  நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரபல தொழிலதிபரும்,  கிங்பிஷர் விமான நிறுவனம் மற்றும் மதுபான ஆலைகளின்  அதிபர் விஜய்மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளில் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்த்து ரூ.9,000 கோடிக்கு மேல்  நிலுவையில் உள்ளது. இது தவிர, சட்ட விரோத பண பரிவர்த்தனை, வரி நிலுவை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளன.

இதையடுத்து இந்தியாவை விட்டு வெளியேறிய விஜய்மல்லையா தற்போது லண்டனில் தலைமறைவாக இருந்து வருகிறார்.

இது தொடர்பாக நடைபெற்று வழக்கில், விஜய்மல்லையாவின் அனைத்து சொத்துக்களையும் முடக்கி  நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன் காரணமாக லண்டன் நீதிமன்றத்தில் விஜய்மல்லையா, தனது  செலவுக்கு பணம் தேவைப்படுவதாக கோரினார். அதைத் தொடர்ந்து,   இந்திய மதிப்பில் வாரம் 18 லட்சம் ரூபாய்  செலவு செய்ய லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

அதைத்தொடர்ந்து சொத்து முடக்கத்தை எதிர்த்து மல்லையா முறையீடு செய்தார்.  அதை விசாரித்த லண்டன் நீதிமன்றம், சொத்துமுடக்க உத்தரவை ரத்து செய்ய மறுத்து விட்டது. அதோடு விஜய்மல்லையாவின் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்த நீதிபதி  ஆன்ட்ரூ ஹென்ஷா, வங்கிகளிடம்  கடன் மோசடி செய்த மல்லையாவிடம் இருந்து வசூல் செய்ய இந்திய நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டார்.