டில்லி

போக்சோ என்னும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை சமரசம் செய்து ரத்து செய்ய முடியுமா எனக் கேரள அரசு அளித்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றது.

கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையத்தில் பயின்று வந்த மாணவிக்கு அங்குள்ள ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். அந்த மாணவியின் பெற்றோர் சார்பில் மலப்புரம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் 9 மற்றும் 10 ஆகிய பிரிவுகளின் கீழ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்குப் பதிவு செய்தனர்.

இது தொடர்பான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், பாதிப்புக்குள்ளான மாணவியின் பெற்றோர் கேரள உயர் நீதி மன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீதான வழக்கை ரத்து செய்வதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என அவர்கள் தெரிவித்திருந்தனர்.  இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில், “குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட வேண்டியவை என்னும் போது, குற்றம்சாட்டப் பட்டவருக்கும், மனுதாரருக்கும் இடையே சமரசம் எட்டப்பட்ட ஒரே காரணத்துக்காக போக்சோ வழக்கை ரத்து செய்வது எப்படிச் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும்?   ஆகவே, கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் இந்த மனு நீதிபதிகள் அஜய் ரஸ்டோகி, ஏ.எஸ். ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசார ணைக்கு வந்தபோது, கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைக்குமாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.  இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் பிறப்பிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளைச் சமரசத்தின் பேரில் ரத்துசெய்ய முடியுமா என்ற சட்டப்பூர்வ கேள்வியை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர்.