டில்லி,
மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவரை நீதிமன்றங்களால் கட்டாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் இந்த அதிரடி தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்கியுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த விமானிக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் வரதட்சணை கொடுமை வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு குறித்த விசாரணையின்போது, நீதிமன்றத்தில், கணவர் தரப்பில், தான் பணியாற்றும் ஊர்களுக்கு மனைவி மற்றும் மகனை அழைத்துச் செல்வதாக கூறி ஜாமீன் பெற்றார்.
ஆனால், கணவர் உறுதியளித்தபடி நடந்து கொள்ளவில்லை என்பதால், மனைவியின் கோரிக்கையை ஏற்று அவரது முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி 3 மாதத்திற்குள் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
மதுரை ஐகோர்ட்டி உத்தரவை எதிர்த்து, விமானி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆதர்ஷ் கோயல், யு.யு.லலித் அடங்கிய அமர்வு, மனைவியுடன் சேர்ந்து வாழும்படி, நீதிமன்றங்களால் கணவரை கட்டாயப்படுத்த முடி யாது என தீர்ப்பளித்துள்ளது.
மனித உறவு தொடர்புடைய இந்த விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிட்டு யாரையும் கட்டா யப்படுத்த முடியாது என்றும் அதிரடியாக கூறினர்.
மேலும் இந்த வழக்கில் கணவரான விமானி, ரூ.10 லட்சத்தை இடைக்கால நிவாரணமாக டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், அந்தத் தொகையை அவரது மனைவி மற்றும் மகனின் அவசரத் தேவைக்காக எடுத்துக்கொள்ளலாம் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.