சென்னை:
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அரசு ஊழியரை தாமதமாக சஸ்பெண்ட் செய்ததற்காக, அரசு உத்தரவை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தாசில்தார் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2016-ம் ஆண்டு என் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறி கொடுக்கப்பட்ட கிரிமினல் புகாரின் அடிப்படையில், 2018-ம் ஆண்டு ஆட்சியர் என்னை பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
ஊழல் குற்றச்சாட்டின்பேரில், 2 ஆண்டுகள் தாமதமாக என்னை பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்எம். சுப்பிரமணியன் அளித்த தீர்ப்பின் விவரம் வருமாறு:
ஊழல் குற்றச்சாட்டுகளில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதில் நீதிமன்றத்துக்கு மாறுபட்ட கருத்து கிடையாது.
தாமதமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், அது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பதை ஏற்கமுடியாது.
அவ்வாறு நீதிமன்றம் ரத்து செய்தால், ஊழல் செய்வோருக்கு எதிராக அரசின் நடவடிக்கை குறைந்துவிடும்.
சஸ்பெண்ட் நடவடிக்கை என்பது, ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே. புகாரின் சாதக, பாதக அம்சங்களை இந்த நடவடிக்கை தீர்மானிக்காது.
புகாரின் அடிப்படையில் நடக்கும் விசாரணையின்போதுதான், குற்றச்சாட்டின் தன்மை குறித்து தீர்மானிக்கப்படும். அப்போது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் தரப்பு வாதத்தை தெரிவிக்கவும் வாய்ப்பு தரப்படும்.
சாதாரணமாக, சஸ்பெண்ட் உத்தரவின் சாராம்சத்துக்குள் சென்று தீர்ப்பளிக்க நீதிமன்றம் விரும்பவில்லை. அதிகார வரம்பை மீறியோ அல்லது சட்டத்தை மீறியோ சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் மட்டுமே நீதிமன்றம் இந்த விசயத்தில் தலையிட முடியும்.
ஊழல் குற்றச்சாட்டின் புகார் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவு இறுதியான உத்தரவு அல்ல. சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு சம்பந்தப்பட்டவர் பதில் அளிக்க வாய்ப்பு தரப்படும்.
சஸ்பெண்ட் உத்தரவு என்பது தண்டனை கிடையாது. விசாரணை நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெற ஏதுவாக, குற்றஞ்சாட்டப்பட்டவர் பணியில் இருக்கக் கூடாது என்ற அடிப்படையிலேயே சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இது ஒரு இடைக்கால நடவடிக்கையே. குறிப்பிட்ட காரணத்துக்காக இந்த உத்தரவை ரத்து செய்ய முடியாது.
ஊழல் என்பது நம் தேசத்தில் புற்றுநோயைப் போல வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.
இதுபோன்ற ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தால் கருணை காட்டவோ அல்லது அனுதாபம் காட்டவோ முடியாது. ஊழல் வழக்குகளை சாதாரண வழக்காகக் கருதமுடியாது. எச்சரிக்கையாகவே கையாள வேண்டும்.
வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் ஏனைய சான்றிதழ் வழங்குவதற்கான கால அளவு பல மாநிலங்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு தேவையான முக்கிய சான்றிதழ்களை விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் மக்களின் குறைகள் விரைந்து நிவர்த்தியாகும்.
இவ்வாறு நீதிபதி எஸ்எம்.சுப்பிரமணியம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.