சென்னை: தமிழ்நாட்டில் ஒட்டகங்களை பலியிடக்கூடாது என்றும், மீறி தமிழகத்திற்கு கொண்டுவந்து பலியிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்துக்கு சட்டவிரோதமாக ஒட்டகங்களை கொண்டு வருவதையும், பலியிடுவதையும் தடுக்க உத்தரவிடக் கோரி கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு சார்பில் 2015ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில்,  சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி  அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது,  ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து ஒட்டகங்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு பலியிடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழகஅரசு, தமிழகத்தில் சட்டவிரோதமாக ஒட்டகங்கள் பலியிடப்படுவது இல்லை,  ஒட்டகங்கள் கொண்டு வரப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பலியிடும் நிகழ்வுகள் நடைபெறவில்லை எனவும் கூறியது.

இதை ஏற்று வழக்கை முடித்து வைத்த   நீதிபதிகள், ஒட்டகங்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு பலியிடுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டதுடன், மீறி  ஒட்டகங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்து பலியிட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக மிருகவதை தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையின்போது குர்பானி கொடுப்பது வழக்கம். பக்ரி என்றால் ஆடு. இந்தியாவில் பெரும்பாலும் ஆட்டை குர்பானி கொடுப்பதால் தான் பக்ரீத் என்று அழைக்கப்படுகிறது. ஆனால், சில வடமாநிலங்களில் ஒட்டங்களை குர்பானி கொடுப்பதும் வழக்கமாக உள்ளது. அதுபோல சமீப ஆண்டுளாக சென்னை உள்பட சில பகுதிகளில் இஸ்லாமியர்கள் வடமாநிலங்களில் இருந்து ஒட்டகத்தை கொண்டு வந்து, இங்கு பலியிட்டு குர்பானி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.