டில்லி:

அங்கிகார அனுமதி கோரி கடந்த ஆண்டு பல பள்ளிகள் சிபிஎஸ்இ.க்கு விண்ணப்பங்களை அனுப்பியிரு ந்தன. இவற்றை பரிசீலனை செய்ய சிபிஎஸ்இ தாமதப்படுத்திவிட்டு அனுமதி வழங்காமலேயே பள்ளிகள் வகுப்புகளை தொடங்க வாய்ப்பு அளித்திருப்பது என்பது மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அமைப்பான சிஏஜியின் தணிக்கையில் தெரியவந்துள்ளது.

ஆண்டுதோறும் ஜூன் 30ம் தேதிக்கு முன்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் 6 மாத காலத்திற்குள் பரிசீலனை செய்து முடிவை தெரிவிக்க வேண்டும் என்பது விதியாகும். 203 விண்ணப்பங்களில் 140க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

140ல் 19 விண்ணப்பங்களுக்கு மட்டுமே 6 மாத காலத்திற்குள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதர 121 பள்ளிகளுக்கு 7 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிபிஎஸ்இ கால தாமதப்படுத்தியுள்ளது என்று சிஏஜி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மீதமுள்ள 203 விண்ணப்பங்களில் 58 விண்ணப்பங்கள் நடுநிலைப் பள்ளிகள் அல்லது மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த கோரி அளிக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் சிபிஎஸ்இ விதிகளுக்கு புறம்பாக பள்ளிகளில் வகுப்புகள் செயல்பட தொடங்கிய பின்னரே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 203 விண்ணப்பங்களில் 123 விண்ணப்பங்களுடன் தாக்கல் செய்யப்பட்ட மாநகராட்சி, தீயணைப்பு துறை, போக்குவரத்து அதிகாரிகள் சான்றிதழ் முறையாக இல்லை.

123ல் 76 விண்ணப்பங்கள் உரிமம் காலாவதியாகிய பின்னரோ அல்லது காலாவதி ஆக ஓராண்டு இருந்த நிலையிலோ அனுமதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரம், தூய்மை, மாணவர்கள் பாதுகாப்பு போன்றவற்றுக்கு எவ்வித உத்தரவாதமும் இன்றி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 75 பள்ளிகளுக்கு ஆய்வு குழுவின் அரசியலமைப்பு இல்லாமலேயே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள பள்ளிகளில் சுழற்சி முறையில் ஆய்வுகள் நடத்தப்படவில்லை. ஆண்டறிக்கை சமர்ப்பித்தல், நிதி தணிக்கை, இதர முறைகேடு, விதிமீறல் போன்று எதுவும் கண்காணி க்கப்படவில்லை என்று அந்த அறிக்கையில் சிஏஜி தெரிவித்துள்ளது.