சென்னை
அதிமுக அரசு தனது ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு வழங்கிய ரூ.74.3 கோடி நிதியை வீணடித்ததாக சி ஏ ஜி தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகக் காவல்துறை நவீனமயமாக்கல் திட்டம் என்பது தமிழக அரசு 40% மற்றும் மத்திய அரசு 60% என நிதி பங்களிப்புடன் செயல்படும் திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2015-16ம் ஆண்டிற்கான பொது பாதுகாப்பு தகவல் தொடர்பு அலுவலர்கள் இணையம் என்ற திட்டத்தை சென்னை மாநகரில் செயல்படுத்துதல், கடந்த 2016-17ம் ஆண்டிற்கான காவல் துறை கட்டுப்பாட்டு அறைகளை நவீனமயமாக்குதல் மற்றும் சென்னை மாநகரில் கண்காணிப்பு படக்கருவி நிறுவுதல் ஆகியவற்றிற்கு 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த நிதியைச் சரிவரப் பயன்படுத்தாமல் வீணடித்துள்ளதாக சி ஏ ஜி எனப்படும் மத்திய தணீக்கைத்துறை ஜெனரல் அலுவலக அறிக்கை குற்றம் சாட்டி உள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பாக காவல்துறையின் நவீன மயமாக்கலுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் கடும் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் அலைக்கற்றைக் கட்டணம் பயனற்ற செலவினம் என கூறப்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் திருச்சி திட்டங்கள் போதிய இலக்கை அடைய முடியாமல் போனதுடன் மத்திய அரசின் ரூ.74.3 கோடி நிதி உதவியைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.