கடந்த இரண்டு ஆண்டுகளாக மோடி அரசு, நேரடியாக வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் கேஸ் மானியத்தை செலுத்தும் திட்டம் (DBLT) அறிமுகப் படுத்தியது.
வசதி படைத்தவர்களை மானியத்தை விட்டுத்தரக் (#கிவ் இட்அப், #Giveitup)கோரியும் பல கோடி ரூபாய் செலவழித்து விளம்பரப் படுத்தி வருகின்றது.
இவை இரண்டின் மூலம் 2014-2015 மற்றும் 2015-2016 நிதியாண்டுகளில் மட்டும் 22,000 கோடி ரூபாயை அரசு மிச்சப் படுத்தியுள்ளதாக தெரிவித்து வருகின்றது மத்திய அரசு.
பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், சமீபத்தில் நடந்த ஒரு மாநாட்டில், 2014-2015 ஆண்டுகளில் மத்திய அரசு 15,000 கோடி மிச்சப் படுத்தியுள்ளது” என கூறியிருந்தார்.
பிரதமர் மோடி 2015ல் செங்கொட்டையில் உரையாற்றுகையில், ” மக்களின் வரிப்பணம் 15,000 கோடி ஆண்டுக்கு திருடப் பட்டுவந்தது. ஆதார் கார்டு, வங்கிக்கணக்கு மூலம் நாங்கள் வழிமுறைகளை நெறிப்படுத்தியுள்ளோம். நாங்கள் ஆட்சிக்குவந்து அதை தடுத்துநிறுத்தியுள்ளோம்” என வீராவேசமாகப் பேசியிருந்தார்.
சி.ஏ.ஜி அறிக்கை சொல்வதென்ன ?
ஆனால் இது உண்மை இல்லை என சி.ஏ.ஜி. அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.
கடந்த இரண்டாண்டுகளில், வெறும் 2000 கோடி ரூபாய் மட்டுமே மானியத்தை விட்டுக்கொடுத்தவர்களால் அரசுக்கு மிச்சமாகி யுள்ளது.
மீதமுள்ள தொகை அனைத்தும், இந்தியா இறக்குமதி செய்யும் எல்.பி.ஜி.யின் விலை உலகச் சந்தையில் மிகவும் குறைந்ததே காரணம். ஆனால், மத்திய அரசும், பா.ஜ.க.வும் இந்த விசயத்தில் கூறி வருவது உண்மைக்கு மாறானது என சி.ஏ.ஜி அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், மத்திய அரசின் ” பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவினர் நடத்திய ஆய்வில் ” 2014-15 ல் 36,571 கோடி ரூபாய்க்கு எல்.பி.ஜி இறக்குமதி செய்யப் பட்டது. 2015-16ம் ஆண்டில் தோராயமாக 25,626 கோடி ரூபாய் செலவிடப் படவுள்ளது. இதன் மூலம் 10,945 கோடி ரூபாய் ஒரு வருடத்தில் மட்டுமே சேமிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.
இதனையும் மேற்கோள் காட்டி, சி.ஏ.ஜி அமைப்பு தனது அறிக்கையை நடைபெறவுள்ள பாராளுமன்றக் கூட்டத்தொடரின் போது சமர்ப்பிக்கவுள்ளது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு , தனது பங்களிப்பு எதுவும் இல்லை என்றாலும், தேர்தல் ஆதாயத்திற்காக போலியான தகவலை மக்களிடம் பரப்பி வருகின்றது.
எதிர்கட்சிகள் அரசின் பொய்யான பிரச்சாரம் குறித்து கேள்வி எழுப்புவர்.
சி.ஏ.ஜி. அறிக்கையின் விளைவு என்னவாக இருக்கும் ?
அரசின் பல்வேறு துறைகளும் செலவுகளை உரிய முறையில் மேற்கொள்கின்றனவா? என்பதை ஆராய்வதே சி.ஏ.ஜி.யின் வேலை. தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் சி.ஏ.ஜி. அறிக்கையை மக்களவைத் தலைவர் முன் சமர்ப்பிப்பார்.
மக்களவைத் தலைவர் அதை பொதுக் கணக்குக் குழுவுக்கு (பி.ஏ.சி.) அனுப்பி வைப்பார். சிஏஜி தெரிவித்த கருத்துக்களை பி.ஏ.சி. ஆராய்ந்து, அறிக்கை தரும்.
சி.ஏ.ஜி. சொல்வதாலேயே அது இறுதியான கருத்து ஆகாது. அதன் அறிக்கையை பி.ஏ.சி. சோதிக்க வேண்டியுள்ளது. பொதுக் கணக்குக் குழு என்பது நாடாளுமன்றத்தின் அங்கமாகும். அது அறிக்கை அளித்த பின்பே அரசால் நடவடிக்கை எடுக்க முடியும்.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகளில் ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதையும், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததையும் அம்பலப்படுத்திய மத்திய தலைமைக் கணக்கு தணிக்கையாளர் திரு. வினோத் ராய் மே 2013ல் ஓய்வுப் பெற்றுவிட்டார். தற்போது சசிகாந்த் சர்மா அப்பதவியில் நீடித்து வருகின்றார். சி.ஏ.ஜி. போன்ற தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பின் உயர் பதவிக்கு பலவீனமான ஒரு அதிகாரியை நியமித்திருப்பதன் மூலம் மத்திய அரசு, அந்த அமைப்பையே பலவீனப்படுத்திவிட்டதாக உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரான திரு. பிரசாந்த் பூஷண் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
2ஜி அலைக்கற்றை, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஆகிய முறைகேடுகள் குறித்து சி.ஏ.ஜி. அளித்த அறிக்கைகள் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி :தி ஹிந்து