டெல்லி: புதிய நிறுவனங்களும் இனி பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனை தொழிலில் இறங்கும் வகையில் விதிகளை மத்திய அரசு தளர்த்தி இருக்கிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் பல்வேறு துறைகளை சீரமைக்கும் விதமாக ஒப்புதல் வழங்கப்பட்டது. தமிழகத்துக்கு மேலும் 6 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அது தவிர மேலும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில் முக்கியமான ஒன்று, பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை செய்ய புதிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதாகும். அதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கி உள்ளது.
20 ஆண்டுகளில் செய்யப்படும் மிகப்பெரிய சீர்திருத்தம் என்று கருதப்படுகிறது. இதன் மூலம், 250 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விற்பனையில் ஈடுபட அனுமதியளிக்கப்படும்.
அதற்காக அந்த நிறுவனங்கள், தொழில் ஆரம்பித்த 5 ஆண்டுகளில் கிராம புறங்களில் 5 சதவீத விற்பனை நிலையங்களை அமைக்க வேண்டும், 3 ஆண்டுகளில் உயிரி எரிபொருள் உள்ளிட்ட பல வசதிகளை செய்ய வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் இந்த முடிவால், தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள், பெட்ரோல் டீசல் விற்பனை தொழிலில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. வழிவகை ஏற்பட்டுள்ளது.
பெட்ரோலிய துறையில் 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே தற்போது இத்தொழிலில் ஈடுபட அனுமதிக்கப் படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.