சென்னை: தமிழ்நாடு அரசின் இன்றைய அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில்,, பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் மாநில மகளிர் கொள்கைக்கு தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்தபடி, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில்,  தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரவை அறையில் காலை 11 மணியளவில் இந்த ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.   இதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும்,  அதைதொடர்ந்து அரசு சார்பில் முக்கிய முடிவுக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 7 மற்றும் 8ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் மேற்கொள்ளப்பட பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் ஈர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த முதலீடுகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிப்பு வெளியானது.  இந்த நிலையில், இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், தனது வெளிநாட்டு பயணத்தின்போது, நிர்வாகத்தை கண்காணிக்க பொறுப்பு யாருக்கு வழங்குவது என்பது உள்பட  மக்கள் நலதிட்டங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும்,  ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் ஜனவரி மாதம் தமிழக சட்டப்பேரவை கூட்டம், ஆளுநர் உரையுடன் தொடங்கும். ஆனால் நடப்பாண்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு, பிரதமர் மோடி தமிழகம் வருகை மற்றும் முதலமைச்சரின் வெளிநாடு பயணம் ஆகிய காரணங்களால் சட்டப்பேரவை கூடுவது தாமதமாகி வருவதால் அது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பிப்ரவரி 2வது வாரத்தில் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க இருப்பதாகவும்,  தொழில்துறை, சமூக நலத்துறை மற்றும் கலால் துறை தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதுடன்,  மாநில மகளிர் கொள்கைக்கு தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.