டில்லி:
மத்திய அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அரசின் முதன்மை செய்தி தொடர்பாளர் பிராங்க் நோர்கானா, நேற்று காலை
இதற்கான அறிவிப்பை ‘டுவிட்டர்’ மூலம் வெளியிட்டார். இன்று காலை, 11:00 மணிக்கு, ஜனாதிபதி மாளிகை அசோகா மண்டபத்தில் பதவி யேற்பு விழா நடக்கிறது.
அமைச்சரவை மாற்றம் பற்றி கூறப்படுதவதாவது:
“75 வயதை கடந்தவர்களை, அமைச்சரவையிலிருந்து நீக்கிவிட்டு அதற்கு பதிலாக புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்க பிரதமர் திட்டமிட்டுள்ளார்.
உ.பி., உள்ளிட்ட ஏழு மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடக்க இருப்பதால் அம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் அதிக வாய்ப்பு அளிக்கப்படும். மூத்த அமைச்சர்களின் சிலரின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்படும். தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிறிய கட்சிகளுக்கு, இம்முறை அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கும் என, தெரிகிறது.
இந்திய குடியரசு கட்சியின் ராம்தாஸ் அத்வாலே, சிவசேனாவின் அனில் தேசாய், அப்னா தளம் கட்சியின் அனுபிரியா படேல் ஆகியோர், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவை சந்தித்திருக்கிறார்கள். ஆகவே அவர்கள் அமைச்சர்களாவது உறுதியாகி உள்ளது.
மூத்த அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா நீக்கப்படுவார். தற்போது இணை அமைச்சர்களாக உள்ள முக்தார் அப்பாஸ் நக்வி, தர்மேந்திர பிரதான், பியுஷ் கோயல், சஞ்சீவ் பல்யான் ஆகியோர், கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர்.
சமூக நீதித்துறை இணையமைச்சர் விஜய் சம்லா, உரத்துறை இணையமைச்சர் நிகல்சந்த், நீர்வளத்துறை இணையமைச்சர் சன்வர்லால் ஆகியோரின் செயல்பாடுகள் பிரதமர் மோடிக்கு திருப்தி அளிக்காததால் அவர்களது பதவி பறிக்கப்படலாம்.
காங்கிரஸ் கருத்து:
“மத்திய அரசின் திறமையற்ற செயல்பாடுகளால் நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. இதை மறைப்பதற்காக அமைச்சரவையை அழகுபடுத்தும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். இதனால் அவருக்கும், அவரது அரசுக்கும் எந்த பயனும் கிடைக்காது” என்று , மூத்த தலைவர் காங். டாம்வடக்கன் தெரிவித்துள்ளார்.