2023ம் ஆண்டுக்கான சர்வதேச புள்ளியியல் விருது இந்தியரான சி.ஆர். ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கணிதம் மற்றும் புள்ளியியல் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் இந்த விருது நோபல் பரிசுக்கு சமமாகக் கருதப்படுகிறது.
102 வயதாகும் கல்யம்புடி ராதாகிருஷ்ண ராவ் என்கிற சி.ஆர். ராவ் 1920 ம் ஆண்டு கர்நாடகாவில் பிறந்தார். தெலுங்கு மொழியைக் தாய்மொழியாகக் கொண்ட இவர் ஆந்திராவில் கல்வி பயின்றார்.
கல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1943 ம் ஆண்டு பட்டம் பெற்ற இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.
புள்ளியியல் துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்த இவருக்கு இந்திய அரசு 1968 ம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் 2001 ம் ஆண்டு பத்ம விபூஷண் விருதும் வழங்கி கௌரவித்துள்ளது.
இந்த நிலையில் 1945 ம் ஆண்டு இவர் கண்டுபிடித்த புள்ளியியல் கோட்பாட்டிற்காக 75 ஆண்டுகள் கழித்து சர்வதேச புள்ளியியல் விருது தற்போது வழங்கப்பட்டுள்ளது. இவரது கோட்பாடு பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருவதை அடுத்து இவருக்கு இந்த விருதை வழங்கியுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக தொடர்ந்து வரும் சி.ஆர். ராவுக்கு விருதுடன் இந்திய மதிப்பில் சுமார் 65 லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.