சென்னை: பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிமுறைகள் அமலுக்கு வந்து 3 ஆண்டுகள் கழித்து, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை தொடர்பான துணைவிதிகளை வகுத்துள்ளது சென்னை மாநகராட்சி.

இந்த துணைவிதிகளின்படி, பிளாஸ்டிக் கழிவுகளை தரம் பிரித்தல், போக்குவரத்து, பிளாஸ்டிக் கழிவுகளை பதனம் செய்தல் மற்றும் அகற்றுவதற்கான உள்கட்டமைப்புகளை சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும்.

ஆனாலும், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், பிராண்ட் உரிமையாளர்கள் ஆகியோரிடம்தான் முக்கியப் பொறுப்புகள் உள்ளன. பேக்கிங் செய்வதற்கு பல்லடுக்கு பிளாஸ்டிக் பைகள் அல்லது பவுச்சுகள் ஆகியவற்றை தயார்செய்யும் அவர்கள், பயன்படுத்திய பின்னர் அவற்றை திரும்ப பெறுவதற்கான அமைப்பை கட்டாயம் உருவாக்க வேண்டிய தேவையுள்ளது.

தற்போதைய நிலையில், ஆவின் நிறுவனம் மட்டுமே தங்களின் பிளாஸ்டிக் பையை திரும்பப் பெற்றுக்கொள்ளும் சிஸ்டத்தை வைத்துள்ளது. அந்த சிஸ்டத்தை உருவாக்கும் நிறுவனங்களை நாங்கள் ஊக்குவிப்போம் என்று கூறியுள்ளார் சென்னை மாநகராட்சியின் மூத்த அதிகாரி ஒருவர்.

அதேசமயம், அந்த நிறுவனங்கள் ஏற்படுத்தும் சிஸ்டம் குறித்த ஒப்புதல் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து பெறப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பிளாஸ்டிக்கை எரித்தல் மற்றும் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்கை விற்பனை செய்தல் ஆகிய குற்றங்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்படுகிறது.