கேரள மாநிலத்தில் காலியாக உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், 2021ம் ஆண்டுக்கான பொதுத்தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இதை அனைத்து கட்சிகளும் கருதுகின்றன.

கேரளாவில் மஞ்சேஸ்வர், எர்ணாகுளம், கோன்னி, வட்டியூர்காவு, அரூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் காலி தொகுதிகளாக உள்ளன. மஞ்சேஸ்வரம் எம்.எல்.ஏ அப்துல் ரசாக் மாரடைப்பு காரணமாக காலமானார். இதனால் அத்தொகுதி காலி தொகுதியாக அறிவிக்கப்பட்டது. அதைப்போலவே எர்ணாகுளம் எம்.எல்.ஏவாக இருந்த ஹிபி ஈடன், அரூர் எம்.எல்.ஏ ஏ.எம் அரிப், கோன்னி எம்.எல்.ஏ அடூர் பிரகாஷ், வட்டியூர்காவு எம்.எல்.ஏ கே. முரளிதரன் ஆகியோர் மக்களவை எம்.பிக்களாக தேர்வு செய்யப்பட்டனர். மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதன் காரணமாக, நால்வரும் தங்களின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அத்தொகுதிகளும் காலி தொகுதிகளாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே முன்னாள் எம்.எல்.ஏ கே.எம் மாணியின் மறைவை தொடர்ந்து பாலா தொகுதி காலி தொகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வரும் 23ம் தேதி அத்தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இத்தகைய சூழலில் தற்போது கூடுதலாக 5 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும், அக்டோபர் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

காசர்கோடு மக்களவைத் தொகுதியில் உள்ள மஞ்சேஸ்வர் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் பலம் பெற்ற கட்சிகளாக உள்ளன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி 68 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்த நிலையில், பாஜக 57 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி வெறும் 32 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. இதனால் இங்கு காங்கிரஸ் – பாஜக இடையே போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

பல காலமாக காங்கிரஸ் பலம் பெற்ற தொகுதியாக பார்க்கப்படும் எர்ணாகுளம் சட்டப்பேரவை தொகுதியில், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது இடது முன்னணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி பெற்ற வாக்குகளை விட இரு மடங்கு அளவுக்கு காங்கிரஸ் வாக்குகளை பெற்றிருந்தது. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஹிபி ஈடன் மீது மக்களுக்கு கோபம் இருப்பதாக நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மேற்கொண்ட பிரச்சாரம் தோல்வியடைந்ததும், தற்போதைய காங்கிரஸ் மீதான எதிர்பார்ப்பை இத்தொகுதியில் அதிகப்படுத்தியுள்ளது.

ஆலப்புழா மக்களவைத் தொகுதியில் உள்ள அரூர் சட்டமன்ற தொகுதி இடதுசாரிகள் பலம் பொருந்திய தொகுதி. சமீபத்திய சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு எடுத்த நிலைபாடுகள் போன்ற விவகாரங்களால், இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் பலர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்ததாக பரவலாக பேசப்பட்டது. இதன் காரணமாகவே அக்கட்சியின் மாநில தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன், ஆலப்புழா மாவட்ட நிர்வாகிகளின் இல்லங்களுக்கு தனித்தனியாக சென்று, அதன் காரணங்களை கேட்டறிந்தார். தற்போது இடதுசாரிகள் மீதான விமர்சனங்கள் அதிகரிப்பு மற்றும் ராகுல் காந்தியின் கேரள மழையின் போதான உதவிகளால் காங்கிரஸ் இத்தொகுதியை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சபரிமலை விவகாரம் கேரளாவில் காட்டுத்தீ போல ஆளும் மாநில அரசுக்கு எதிராக மாறியபோது, முற்றிலுமாக மாநில அரசை எதிர்த்த மாவட்டங்களில் பந்தனம்திட்டா மாவட்டமும் ஒன்று. இம்மாவட்டத்தில் உள்ள ரண்ணி தொகுதியில் தான், சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. தற்போது இம்மாவட்டத்தில் உள்ள கோன்னி தொகுதியில் தான் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாகவே இம்மாவட்டத்தில் பலம் இல்லாத கட்சியாக இருந்துவந்த பாஜக, சபரிமலை விவகாரத்தின் போது இந்து – கிருத்துவ பிரிவினை மூலம் தனக்கான பலத்தை உயர்த்திக்கொண்டது. கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக இத்தொகுதியில் வெறும் 16% வாக்குகளை மட்டுமே கூட்டணியாக பெற்றிருந்தது. ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தனித்து 29% வாக்குகளை அக்கட்சி பெற்றது. கோன்னி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கடந்த 1996ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. இத்தொகுதியில் இடதுசாரிகள் முன்னணி மற்றும் காங்கிரஸ் இடையே தான் கடந்த 5 சட்டமன்ற தேர்தல்களில் போட்டி இருந்துள்ளது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலின் போது இத்தொகுதியில் காங்கிரஸ் 49 ஆயிரம் வாக்குகளையும், இடதுசாரிகள் முன்னணி 46 ஆயிரம் வாக்குகளையும், பாஜக 46 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளன. வெறும் 440 வாக்குகள் வித்தியாசத்தில் தான் பாஜகவை விட இடதுசாரிகள் முன்னணி முன்னிலை பெற்றிருந்தது. சபரிமலை விவகாரம் ஓய்ந்துள்ள நிலையில், கேரள அரசின் நிலைபாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் இடதுசாரிகள் மீண்டும் தங்களது வாக்கு வங்கியை தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இத்தொகுதியில் முதன் முறையாக மும்முனை போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் வரும் வட்டியூர்காவு சட்டமன்ற தொகுதி 2010ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுமே பலம் பெற்ற கட்சிகளாக உள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட கும்மனம் ராஜசேகரன், கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் களம் கண்டார். அவரே மீண்டும் சட்டமன்ற இடைத்தேர்தலில் களம் காண்பார் என்று அரசியல் விமர்சகர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர். அதேநேரம், புதிய வேட்பாளர் நிறுத்தப்பட இருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக – காங்கிரஸ் இடையே இத்தொகுதியில் வெறும் 2,836 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. இதன் காரணமாக இத்தொகுதியில் இரு கட்சிகளுமே வெற்றியை நோக்கி நகரும் என்றே தெரிகிறது.

கேரள சட்டப்பேரவைக்கான காலம் 2021ம் ஆண்டு மே மாதம் நிறைவடையும் நிலையில், தற்போது நடைபெறும் இந்த 5 தொகுதி இடைத்தேர்தல்கள் மற்றும் பாலா சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் இடதுசாரிகள் முன்னணி, காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. 2021ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வரும் நிலையில், ஆட்சியை தொடர்ந்து தக்கவைக்க இடைத்தேர்தல் மூலம் வியூகங்களை வகுத்து இடதுசாரி முன்னணி போராடும் என்பதால், கேரள அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.