டில்லி
ஆன்லைன் மூலம் பயணச்சலுகை முன்பதிவு செய்ய ஆதார் இணைக்கப்பட்டால் மாதத்துக்கு 12 டிக்கட்டுகள் பதிவு செய்ய முடியும் என ரெயில்வே அறிவித்துள்ளது.
தற்போது அனேகமாக 80%சதவிகிதத்துக்கும் மேற்பட்ட ரெயில்வே பயணச்சீட்டுகள் ஆன்லைன் மூலமே பதிவு செய்யப்படுகின்றன. இதற்கு சில விதிமுறைகளை இந்திய ரெயில்வேயின் ஐ ஆர் சி டி சி (டிக்கட் பதிவு செய்யும் வலைத் தளம்) வைத்துள்ளது. தற்போதைய முறைப்படி ஒரு டிக்கட்டில் ஆறு பேர் வரை மட்டுமே முன்பதிவு செய்யப்படும். தத்கால் டிக்கட்டுகளுக்கு ஒரு டிக்கட்டில் நான்கு பயணிகள் வரை மட்டுமே முன் பதிவு செய்யப்படும்.
தற்போது டிக்கட் பதிவு செய்பவர்கள் தங்களின் ஆதார் எண்ணை இணைக்குமாறு ஐ ஆர் சி டி சி கேட்டுக் கொண்டுள்ளது. அதை ஊக்குவிக்க சில சலுகைகளையும் அளித்துள்ளது. சாதாரணமாக மாதத்துக்கு ஆறு பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில் ஆதார் எண்ணை இணைத்தவர்கள் மாதத்துக்கு 12 பயணிகள் வரை அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது. ஆறு பயணிகளுக்கு மேல் ஒரு மாதத்துக்கு டிக்கட் பதிவு செய்ய ஆதார் அவசியம் எனவும் அறிவித்துள்ளது.
ஏற்கனவே ரெயில்வே நிர்வாகம் பயணச்சீட்டு ஆன்லைனில் பதிவு செய்ய 2017ஆம் வருடம் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து ஆதார் எண் அவசியம் என அறிவித்திருந்தது. ஆனால் அதற்கு எதிர்ப்புகள் அதிகரிக்கவே அந்த யோசனையை நிர்வாகம் கைவிட்டு விட்டது. இன்று ஆதார் எண்ணை அனைத்துத் திட்டங்களுக்கு மத்திய அரசு கட்டாயம் ஆக்குவது செல்லத் தக்கதா என்னும் வழக்கில் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத் தக்கது.