சென்னை,
தமிழக இடைத்தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடாது என ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
தஞ்சை, அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடாது என்றார் ஜி கே வாசன்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி கே வாசன்,
இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிக்கு சாதக மான தேர்தல் என்ற நிலை தமிழகத்தில் உள்ளது.
எவ்வளவு முயற்சி செய்தாலும் பிற கட்சிகள் இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியாத சூழலும் உள்ளது.
இதை மனதில் வைத்துக் கொண்டு மூன்று தொகுதி தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட வில்லை என அவர் கூறினார்.
மேலும், திமுக கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்றதில் எந்தவிதமான அரசியல் நோக்கமும் இல்லை. விவசாயிகள் நலன் மட்டுமே பிரதானம் என்பதால் கலந்து கொண்டோம் என தெரிவித்தார்.
மேலும் தமிழகத்திற்கு முழு நேர ஆளுநரை நடுவண் அரசு நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த அவர் அனைத்து விவசாயிகளின் கடன்களை நடுவண் மற்றும் மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு வெடி விபத்துகளை தவிர்க்கும் வண்ணம் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அரசு அதிகாரிகள் கவனமாக செயல்படாமல் இருப்பதே 50% விபத்திற்கு காரணம் என குற்றம்சாட்டிய அவர் பொதுமக்களும் கவனமாக செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.