சென்னை
சிறிது வெந்நீர் ஊற்றினால் 61 கிராம் பொங்கல் 230 கிராமாக மாறும் எனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்களில் வழங்கப்படும் உணவு தரமாக இருப்பதில்லை என்னும் குற்றச்சாட்டு அதிக அளவில் உள்ளது. அத்துடன் அளவு குறைவு, சுவை குறைவு போன்ற குற்றச்சாட்டுகளும் உள்ளது. ஒரு சில நேரங்களில் பூச்சிகளும், பல்லிகளும் கூட ரயில்களில் வழங்கப்படும் உணவுகளில் கிடந்ததாகத் தகவல்கள் வெளியானதும் உண்டு
சமீபத்தில் திருச்சியில் இருந்து சென்னைக்கு பல்லவன் ரயிலில் பயணித்த பயணி பொங்கல் வாங்கி உள்ளார். அந்த பொங்கல் சுமார் 50 கிராம் மட்டுமே இருந்ததாகவும் அதில் இந்த பொங்கலை 8 மாதங்கள் வரை சாப்பிடலாம் என எழுதப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. கோபமடைந்த அந்த பயணி ரயிலில் உணவு வழங்கும் காண்டிராக்டர்களை திட்டி வெளியிட வீடியோ வைரலானது.
தென்னக ரயில்வே அளித்த விளக்கத்தில், “அனுமதி பெற்ற உணவு நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளைப் பாதுகாப்பாக ஐ ஆர் சி டி சி வழங்குகிறது. அதில் ஒன்றாக 61 கிராம் பொங்கல் விற்கப்படுகிறது. அதில் உட்கொள்ள வேண்டிய முறை குறிப்பிடபட்டுள்ளது. அந்த பொங்கலில் சிறிது வெந்நீர் ஊற்றி 8 நிமிடம் கழித்துப் பார்த்தால் அது 220 கிராம் முதல் 230 கிராமாக மாறும்” என கூறப்பட்டுள்ளது.