சென்னை
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறுத்தப்பட்ட மாநகர பேருந்து சேவைகள் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னையில் பல்லாவரம் பகுதியில் முந்தைய அதிமுக ஆட்சியின்போது பல்வேறு வழித் தடங்களில் மக்களின் பயன்பாட்டில் இருந்த மாநகர பேருந்து சேவைகள் திடீரென நிறுத்தப்பட்டன. அந்த பகுதி மக்கள் இதனால் பெரிதும் அவதிப்பட்டனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளர் கருணாநிதி இப்பகுதியில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் மாநகர பேருந்து சேவையைக் கொண்டு வருவதாக உறுதி அளித்தார்.
அவர் வெற்றி பெற்றதும் இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் மனு அளித்தார். இதையொட்டி நேற்று மாலை குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் மீண்டும் மாநகர பேருந்து சேவை தொடங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. தமிழக அமைச்சர் தா மோ அன்பரசன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் கருணாநிதி முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட மற்றும் புதிய வழித்தடங்களில் இயங்கும் 17 மாநகர பேருந்து சேவைகளைத் தொடங்கி வைத்துள்ளார். தற்போது குரோம்பேட்டை மற்றும் பல்லாவரத்தில் இருந்து பூந்தமல்லி, பொழிச்சலூர், கோயம்பேடு, திருவான்மியூர், முகலிவாக்கம், திருப்போரூர், மாங்காடு, குன்றத்தூர் பகுதிகளில் மக்களின் பயன்பாட்டுக்கு மீண்டும் மாநகர பேருந்து சேவைகள் துவங்கி உள்ளன.