சென்னை: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பேருந்துகள் இல்லாமல் அவதிப்பட்டு வரும் நிலையில்,  மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருமுன் காப்போம் மருத்துவ திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

‘வருமுன் காப்போம் திட்டம்’ என்பது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டுவந்த திட்டம். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இந்த திட்டம் முடக்கப்பட்டது.. தற்போது மீண்டும் ‘கலைஞர் வருமுன் காப்போம் திட்டம்’ என்று நடைமுறைக்கு வந்துள்ளது.  இந்த திட்டதுக்கு தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது வரை 1035 முகாம்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதன் மூலம் 7.38 லட்சம் நபர்கள் பயனடைந்து உள்ளனர். இந்த திட்டத்தை மேலும் சிறப்பிக்கும் வகையில்,  1250 முகாம் நடத்த அரசு முடிவு செய்துள்ளது என்றார்.

பேருந்து நிறுத்தம் காரணமாக பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனரே என்ற கேள்விக்கு பதில் கூறியவர், இன்றைய  வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டும் தமிழக தொழிற்சங்கத்தினருக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று கூறியதுடன், பேருந்துகள் குறைவான அளவு இயக்கப்பட்டு வருகிறது என்றும் பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு, தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு தெரிவித்தார்.