சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தொடர்பான வழக்கின் விசாரணையின்போது, தொழிலாளர் தரப்பு வழக்கறிஞருக்கும், அரசு தரப்பு வழக்கறிஞருக்கும் காரசார விவாதங்கள் நடைபெற்று வந்தன.
அப்போது, போக்குவரத்துறை தொழிலாளர்களின் பணம் ரூ. ரூ.13,000 கோடியை திமுக அரசு, தேவையின்றி, மற்றவைகளுக்கு செலவு செய்துவிட்டனர் என போக்குவரத்து தொழிலாளர் தரப்பு வழக்கறிஞர் திமுக அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார்.

போக்குவரத்து கழக ஸ்டிரைக் மற்றும் அது தொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதம் தொடர்பாக, அரசு போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்க மற்றும் ஓய்வு பெற்ற நல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது,
நமது வேலை நிறுத்தம் இரண்டாவது நாளாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில் வேலை நிறுத்தத்தை தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு இன்று (ஜன.10) வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையில் இந்த வேலை நிறுத்தம் சட்டவிரோத வேலை நிறுத்தம் என்று அரசு தரப்பில் வாதாடப்பட்டது. நீதிமன்றம் இது சட்டவிரோதமா? சட்டபூர்வமா? என்பதை விவாதிப்பதற்கு இப்பொழுது நாம் கூட வில்லை. பொங்கல் நேரம் பேருந்துகள் இயங்கவில்லை அதை சரி செய்வதற்காக தான் இப்பொழுது விசாரணை நடைபெறுகிறது என கூறியது. அதையொட்டி, நமது வழக்கறிஞர்கள் நமது தரப்பு வாதத்தை முன்வைத்தனர்.
ஏற்கனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாம் பெற்ற தீர்ப்பு அதே போல ஜியோ 142 -ஐ ஒட்டி வெளியிடப்பட்ட தீர்ப்பு இரண்டு தீர்ப்புகளையும் நீதி மன்றத்தில் சுட்டி காண்பித்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கூறினார்கள். அதேபோல், பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகைகள் நமது பணம் 13,000 கோடி செலவு செய்யப்பட்டது போன்ற விவரங்களை எல்லாம் தெளிவு படுத்தினார்.
அரசு தரப்பில் இது பற்றி தொழிலாளர் துறையில் 19-ம் தேதி கன்சிலேஷன் உள்ளது அதற்கு முன்பாக இவர்கள் வேலை நிறுத்தம் செய்தது தவறு என்ற அடிப்படையிலேயே பேசிக் கொண்டிருந்தார்கள். ஓய்வு பெற்ற ஊழியர்கள் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது என்றும் கூறினார்கள்.
நீதிமன்றத்தில் இருந்த இரண்டு நீதிபதிகளில் ஒருவர் ஏற்கனவே ஜி.ஓ. 142 வழக்கில் தீர்ப்பளித்த இரண்டு நீதிபதிகளில் ஒருவர். ஏற்கனவே, நாங்கள் டிவிசன் பெஞ்சில் இது சம்பந்தமாக தீர்ப்பளித்து விட்டோம். ஏன் தீர்ப்பை அமல்படுத்தவில்லை இது நியாயமற்றது என்ற அடிப்படையில் கேள்வி தொடுத்தார். இறுதியாக நீதிமன்றம் எல்லாவற்றையும் பின்னால் விசாரித்துக் கொள்ளலாம். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 5000 இப்போது கொடுங்கள், இது சம்பந்தமாக அரசின் கருத்தை அறிந்து வாருங்கள் என கூறி வழக்கை பிற்பகலுக்கு ஒத்தி வைத்தது.
பிற்பகலில் வழக்கு நடைபெற்ற பொழுது அரசு தனது நிலையில் பிடிவாதமாக இருந்தது. நமது வழக்கறிஞர்கள் நமது கோரிக்கையை வலியுறுத்தினார். நீதிமன்றம் இருதரப்பும் பிடிவாதமாக உள்ளீர்கள். மக்கள் சிரமப்படுகின்றனர். வேலை நிறுத்தம் செய்வது உங்கள் உரிமை இப்போது பொங்கல் உள்ளதால் உங்களுக்குபின்பு 19 -ம் தேதி பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை என்றால் வேலை நிறுத்தம் செய்யுங்கள். இப்போது வேலை நிறுத்தத்தை ஒத்தி வையுங்கள் கூறியது.
அரசு தரப்பிடம் குறைந்தபட்சம் 2000 ரூபாய் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு முன் தொகையாக கொடுங்கள். ஒருவேளை வழக்கு பாதகமாக வந்தால் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்து கொள்ளுங்கள் என்று அரசு தரப்பை வலியுறுத்தினர். ஆனால் அதையும் அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனால், அரசை கடுமையாக கண்டித்த நீதிபதி, நமது நிலையை கேட்டார் நீங்கள் வேலை நிறுத்தத்தை ஒத்தி வையுங்கள் பொங்கலுக்கு பிறகு வேலை நிறுத்தம் செய்யுங்கள் என கூறினர். மக்கள் நலனை முன்னிட்டு இதை பரிசீலிக்க வேண்டும் என்று கூறிய நிலையில் நாங்கள் வேலை நிறுத்தத்தை ஒத்திவைக்க நீதிமன்ற உத்தரவிட்டால் அதை ஏற்றுக் கொள்கிறோம் என்ற அடிப்படையில் வாதிட்டோம் நமது கோரிக்கைகளையும் வலியுறுத்தினோம்.
இறுதியாக நீதிமன்றம் அரசை தனது தீர்ப்பில் கடுமையாக விமர்சித்தது வேலை நிறுத்தத்தை ஒத்தி வைக்க வேண்டும் 19 -ம் தேதிக்கு பிறகு வேலை நிறுத்தம் செய்யுங்கள். வேலைக்கு போகும் தொழிலாளிகள் மீது நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. நாளைக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என தீர்ப்பளித்தது.
இது சம்பந்தமாக விவாதித்த நமது கூட்டமைப்பு நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பது எனவும், தொடர்ந்து நமது கோரிக்கை களுக்கு இணைந்து போராடுவது எனவும் முடிவு செய்துள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]