சென்னை

சென்னை நகரில் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தும் போராட்டம் மாநிலம் எங்கும் பரவி உள்ளது.

ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி முடிவு ஏற்படாததால் புறநகர் பகுதிகளான தாம்பரம், பூந்தமல்லி, திருவான்மியூர் அகிய இடங்களில் பேருந்துகளை திடீரென நிறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.    அது சிறிது சிறிதாக பரவி கோயம்பேடு, ஆவடி போன்ற பகுதிகளிலும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.   இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

சென்றுக்கொண்டிருந்த  பேருந்துகளும் ஆங்காங்கே நிறுத்தப் பட்டு பயணிகள் இறக்கி விடப்படுகின்றனர்.   இதனால் அலுவலகம் முடிந்து செல்வோரும், மாணவ மாணவிகளும் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.   பல பேருந்து நிறுத்தங்களில் பொதுமக்கள் நீண்ட நேரமாக காத்திருந்தும் பேருந்துகள் வராததால் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இந்த போராட்டம் பரவி உள்ளது.   இங்கும் வழியில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப் பட்டுள்ளனர்.   திருச்சிக்கு வரும் நகர மற்றும் புறநகர் பேருந்துகள் பணிமனைக்குள் கொண்டு சென்று நிறுத்தப் பட்டுள்ளன.   கடலூரிலும் இதே நிலை தொடர்கிறது

அமைச்சர் விஜயபாஸ்கருடன் தொழிற்சங்க நிர்வாகிகள் குரோம்பேட்டையில் பேச்சு வார்த்தை தொடர்ந்து நடத்துவதாக தகவல்கள் வந்துள்ளன.