சென்னை: 4நாட்களுக்கு பிறகு சேலம்-ஏற்காடு இடையே பஸ் போக்குவரத்து தொடங்கி உள்ளது. கடந்த  30ந்தேதி மாலை முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில், இன்றுமுதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கி உள்ளது.

ஃபெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்திலும் கடந்த 1ந்தேதி முதல் பலத்த காற்றுடன் மழை கொட்டியதால், ஏற்காடு மலை பகுதியின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தற்போது நிலைமை சீராகி, தடைகள்அகற்றப்பட்ட நிலையில், இன்றுமுதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கி உள்ளது.

ஃபெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 29-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை கன மழை கொட்டியது. இதனால் மலைப்பாதையில் ஆங்காங்கே சிற்றருவிகள் உருவாகி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தொடர்ந்து அஸ்தம்பட்டியில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 20 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் பாறைகள் உருண்டும் மரங்கள் சாய்ந்தும் விழுந்ததால் வாகனப்போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது.

மழை குறைந்ததும், கடந்த 3 நாட்களாக,  நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் விழுந்த மண், பாறைகள் மற்றும் முறிந்து விழுந்த மரக்கிளைகளை அகற்றி வந்தனர். மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்றுமுதல் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது.

முன்னதாக நேற்று மாலை முதல்,  சேலத்தில் இருந்து வழக்கமாக ஏற்காட்டிற்கு செல்லும் அடிவார மலைப்பாதையில் இலகுரக வாகனங்கள் மட்டும் செல்ல  மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிள்கள், கார்கள், வேன்கள், மளிகை பொருட்கள், பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லும் சிறிய வாகனங்கள் சென்று வந்தன. ஆனால், கனரக வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில்,  இன்று காலை முதல் ஏற்காட்டில் அடிவாரம் வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர்.  இதனால் ஏற்காட்டிற்கு செல்பவர்களும், அங்கிருந்து சேலத்திற்கு வரும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் அந்த பஸ்களில் பயணம் செய்தனர்.