செங்கல்பட்டு: பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதை தடுக்க நீதிமன்றங்கள் பலமுறை அறிவுறுத்தியும், அதை மீறிய மாணவர்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டிஜிட்டல் வளர்ச்சியை போல மாணவர்களின் வளர்ச்சியும் விபரீதமாகி வருகிறது. கடந்த சில வருடங்களாக மாணவர்கள், வகுப்பறையில் ஆசிரியர்களை அவமரியாதை செய்வது, அவர்கள் முன் மரியாதையின்றி நடனமாடுவது, சக மாணவர்களை ரேகிங் செய்வது என ஒழுக்கக் கேடான செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதுடன், ரூட் தல பிரச்சினை, படிக்கட்டு பயணம் போன்றவை தொடர்கதையாகி இருக்கிறது. சமீப காலமகா மாணவர்களிடையே போதை பொருள் நடமாட்டமும் தீவிரமடைந்து உள்ளது.
மாணவர்களின் ஒழுக்கக்கேடான செயல்களை தடுக்க ஆசிரியர்களும், காவல்துறையினரும், அவ்வப்போது விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். மேலும் படிக்கட்டு பயணம் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தி வருகின்றனர். இருந்தாலும் மாணவர்களின் நடவடிக்கைகளில் முன்னேற்றம் இல்லை. இதனால், காவல்துறையினர் படிக்கட்டு பயணம் செய்யும் மணாவர்கள் மீது சற்று கடினமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் சிலர் மதுராந்தகம் அருகே விபத்தில் சிக்கி பலியாகினர். தனியார் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த 3 கல்லூரி மாணவர்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியின் பக்கவாட்டில் பேருந்து உரசியதில் மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டு உள்ளது.
மதுராந்தகம் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று(மார்ச் 12) காலை பேருந்தும் சரக்கு லாரியும் உரசியதில் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். மேல்மருவத்தூர் அருகே இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. அதில் பேருந்தில் படியில் தொங்கியபடி பயணித்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒரு மாணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்த 4 மாணவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப் பட்டுள்ளன. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவர்கள் படிக்கட்டில் தொங்குவதை பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் கண்டித்தால், அவர்கள் தாக்கப்படும் சூழல் உள்ளது. அதனால் காவல்துறையினர்தான் இதுபோன்ற நடவடிக்கைகளில் தீவிரம் கட்ட வேண்டும் என்றும், காவல்துறையினரின் அலட்சியத்தால்தான் இன்று 4 உயிர்கள் பலியாக உள்ளது உள்ளது என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
மாணவர்களுக்கு உயிரின் மீது கவலையில்லை. பெற்றோர்களுக்கு பிள்ளைகளை கண்டிக்க இயலவில்லை. போக்குவரத்து போலீஸுக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை என நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர்.