சென்னை: தமிழ்நாட்டில் பேருந்து சேவையால் கோடிகணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் வெள்ளை அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில், தமிழக போக்குவரத்துத் துறைஅமைச்சர் ராஜகணப்பன், பேருந்து கட்டணம் தற்போதைக்கு உயர்த்தப்பட மாட்டாது என்று அறிவித்து உள்ளார்.
மேற்கு சைதாப்பேட்டையில் புதிய வழித்தடங்கள் மற்றும் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில், 23 மாநகரப் பேருந்துகள் இயக்கத்தினை, போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், பொதுமக்களின் நன்மையை கருதி, முதல்வர் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார். அதிமுகவினர் கடந்த ஆட்சி காலத்தில், மோசமான நிர்வாகத்தை நடத்திவிட்டு நல்லவர்கள் போல் நடிக்கிறார்கள். உப்பைத் தின்னவன் தண்ணீர் குடித்துதானே ஆக வேண்டும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழகத்தில் போக்குவரத்து துறை நஷ்டத்தில் சென்றாலும், மக்கள் நலனில் அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் நிர்வாக சீர்கேடு காரணமாக கடன் சுமை ஏற்பட்டுள்ளது .திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை புது பொழிவு பெரும்.
தற்போது ஓடிக்கொண்டிருக்கும் பழைய பேருந்துகள் அகற்றப்பட்டு புதிய பேருந்துகள் இயக்கப்படும் அதற்காக, ஜெர்மனி நாட்டுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதன்படி விரைவில் 2500 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.
தற்போது போக்குவரத்து துறை பெரும் நிதி சுமையில் இருந்த போதும், பேருந்துக் கட்டணங்களை உயர்த்தும் எண்ணம் தற்போது இல்லை. அதற்குபதிலாக தேவையற்ற செலவுகளை குறைத்து வருகிறோம்.
தமிழகத்தில் 40% பெண்கள் பயன்படுத்துவார்கள் என்ற எண்ணத்தில், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்பொழுது 61% பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதுவரை 9.20 லட்சம் மகளிர் பயனடைந்துள்ளனர். நாளொன்றுக்கு 30 லட்சம் மகளிர் பயணடைந்து வருகின்றனர். இதனால் கூடுதலாக 150 கோடி ஒதுக்க வேண்டியுள்ளது என தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் போக்குவரத்து கழகங்களில் தினசரி செயல்பாட்டு இழப்பு 15 கோடி ரூபாய் என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியிட்டு குறிப்பிட்டிருந்தார். இதற்கு காரணமாக, டிக்கெட் கட்டணம் உயர்த்தாது, இலவச பேருந்து கட்டணம் காரணம் என விமர்சனம் எழுந்தது. அதுபோல, திமுக ஆட்சிக்கு வந்ததும், பெண்களுக்கு இலவச பயணம் என அறிவித்து, நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால், வருமான இழப்பு மேலும் பல கோடிகளை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.