திருச்சி: திருச்சி அருகே ஓடும் அரசு  பஸ்ஸில் இருந்து நடத்துனர்  இருக்கை கழன்று , நடத்துனர் வெளியே தூக்கி வீசப்பட்ட  நிலையில் நடத்துனர் பலத்த காயம் அடைந்தார். கடந்த வாரம் ராஜபாளையம்  அருகே அரசு பேருந்தின் படிக்கட்டு உடைந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அரசு பேருந்தின் இருக்கை கழன்று தூக்கி வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக அரசு பெண்களுக்கு  இலவச பேருந்து  ஆசைக்காட்டி தனது வாக்குவங்கியை அதிகரித்துள்ள நிலையில்,  வருமானம் இல்லாததால், அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்காமல் இருப்பதே இதுபோன்ற விபத்துக்களுக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.  இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்கதையாக மாறி வருகிறது.

 திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பஸ் புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ், பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் கண்டக்டர் இருக்கை அமைக்கப்பட்டிருந்த பேருந்தின் அடிப்பகுதி திடீரென கழன்று அதில் அமர்ந்திருந்த கண்டக்டர் உடன் பேருந்துக்கு வெளியே தூக்கி வீசப்பட்ட சோகம் நடந்தேறியது. இதைக்கண்ட சக பயணிகள் கூச்சலிட்ட நிலையில், டிரைவர் பேருந்தை  நிறுத்தில், சாலையில் விழுந்து கிடந்த நடத்துனரை மீட்டனர். 

இந்த விபத்தில் நடத்துனக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு,  அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுமதித்தனர். பின்னர்  டிரைவர், அந்த பஸ்ஸில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு டவுன் பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் டிரைவர் ரோட்டில் கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார்.

அதிர்ஷ்டவசமாக கண்டக்டர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர்.

ஏற்கனவே ஏப்ரல் 16ந்தேதி அன்று ராஜபாளையம் அருகே இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து  அரசு டவுன் பஸ் ஒன்று முடங்கி ஆறு சாலையில் சென்று கொண்டு இருந்தது. அப்பொழுது அங்குள்ள  தாசில்தார் அலுவலகம் சென்ற பொழுது பஸ்ஸின் பின்பக்கம் பெரும் சத்தம் கேட்டது. இதில் பின்புறம் படிக்கட்ட திடீரென உடைந்து சாலையில் விழுந்ததால் இந்த ஒரு சத்தம் கேட்டது. அப்போது படிக்கட்டில் பயணிகள் யாரும் இல்லாத காரணத்தினால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனே பஸ் நிறுத்தப்பட்டு பின்னர் உடைந்த படிக்கட்டை பணி மணிக்கு எடுத்து சென்றார்கள்.

அதுபோல கடந்த ஆண்டு இறுதியில், சென்னை    ஆவடி முதல் புதிய கண்ணியம்மன் நகர் வரை, 61-கே என்ற எ பேருந்து வழக்கம்போல கண்ணியம்மன் நகர் பகுதியிலிருந்து ஆவடி நோக்கி 100-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் கூட்ட நெரிசல் இருந்ததால் சிலர் படிக்கட்டில் நின்றவாறு பயணம் செய்தனர். அப்போது பாரம் தாங்காமல் பேருந்தின் பின்பக்க படிக்கட்டு உடைந்ததில், அதில் நின்றிருந்த இரு பள்ளி மாணவர்களும்,ஒரு இளைஞரும் கீழே விழுந்தனர். பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

முதற்கட்ட தகவலில் பேருந்தின் படிக்கட்டுகள் சேதமடைந்திருப்பது குறித்து ஏற்கெனவே பணிமனையில் கூறியிருந்தும் அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில், தற்போது, ஓடும் பஸ்சில் இருக்கை கழன்று கண்டக்டர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  தமிழகத்தில் ஏராளமான பொதுமக்கள் அரசு பேருந்து பயணத்தை தான் நம்பி இருக்கிறார்கள். ஆனால் இங்கு இருக்கும் பேருந்துகள் மிகவும் பழமையானதாகவும் பெருமளவில் மேற்பார்வை இல்லாததால் பழுதடைந்து தான் காணப்படுகிறது. இதனால் பேருந்துகளின் எந்தபெகுதி எந்த நேரத்தில் உடைந்து விடும் என்பது கூட அறியாது பொதுமக்கள்  திக் திக் என தங்களது பயணங்களை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழ்நாடு அரசு, பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு,  இதுபோன்ற பஸ்களை இயக்குவதை தவிர்த்து,  நல்ல நிலையில் உள்ள பஸ்களை மட்டுமே இயக்க வேண்டும் என்றும், இலவச பயணம் என்பதால், எதையும் இயக்கலாம், யாரும் கேட்க மாட்டார்கள் என்ற மனநிலையை மாற்றிக்கொண்டு மக்கள் பணியாற்ற வேண்டும்  பல்வேறு தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.