சென்னை: டிடிஎப் வாசனின் பைக்கை எரித்து விடுங்கள் என்றும், அவரது யுடிபூப் சேனலை மூடுங்கள் என டிடிஎப் வாசனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற நீதிபதி காட்டம் தெரிவித்து உள்ளார். பிரபல யுடியூபர் டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனு மீது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்த நிலையில் அவருடைய ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழக இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் டிடிஎஃப் வாசன் இவர் அவ்வப்போது பைக் ஓட்டும் வீடியோக்கள், வீலிங்க செய்வது போன்ற சாசகங்களை தனது Twin throttlers எனும் யூடியூப் சேனல் மூலம் பதிவிட்டு, பிரபலமானவர். கடந்த ஆண்டு வட இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலையில் 247 கி.மீ. வேகத்தில் இவர் சென்ற வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இவரது பைக் சாகசத்தை பார்க்க ஏராளமான பாலோயர்கள் மற்றும் ரசிகர்கள் மற்றும் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இவருக்கு 3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் சப்ஸ்கிரைபர்களாக உள்ளதாக கூறப்படுகிறது. இவர் அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி, காவல்துறையினரின் நடவடிக்கைகளுக்கு உள்ளானவர்.
இந்த நிலையில்தான் கடந்த மாதம் (செப்டம்பர்) 17ஆம் தேதி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் அருகே தனது பைக்கில் சென்றுகொண்டி ருந்த திடீரென வீலிங் செய்ய முயன்றார். அப்போது அவர் சென்ற பைக் விபத்தில் சிக்கி பெரும் சேதத்திற்குள்ளானது. அவருடைய பைக் அப்பளம் போல் நொறுங்கியது.ஆனால், முறையான பாதுகாப்பு வசதிகளுடன் அவர் பைக் ஓட்டியதால் வாசன் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் மீது பாலுசெட்டிசத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இவர்மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 இல் டிடிஎஃப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அக்டோபர் 3ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமின் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அக்டோபர் 16ந்தேதி வரை சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையின்போது, காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், டிடிஎஃப் வாசன், ரூ.20 லட்சம் மதிப்பிலான பைக் வைத்துள்ளார், ரூ. 3லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உடைகள் அணிந்திருந்ததால் உயிர் தப்பியுள்ளார் என்றும், காவல்துறை டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை பின் தொடர்பவர்களில் 45 லட்சம் பேர் சிறார்கள், அவர்கள் வாசனின் சேனலை பார்த்து முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளது என்று குற்றம் சாட்டியதுடன், அதிவேகமாக வாகனம் ஓட்டுவதும், பலர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுற்கு இதுவே காரணம் என கூறி ஜாமின் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
விசாரணையைத் தொடர்ந்து, டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, டிடிஎஃப் வாசனின் பைக்கை எரித்து விடலாம், விளம்பரத்திற்காக இது போன்ற செயலில் ஈடுபடும் டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என்றும் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் காட்டமாக தெரிவித்தார். நீதிபதியின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.